தமிழகம்

சேலம்: லஞ்ச வழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு 7 போலீஸ்காரர்களுக்கு சிறை

எஸ்.விஜயகுமார்

17 ஆண்டுகளுக்குப் பிறகு, ரூ.8 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஆத்தூர் மதுவிலக்கு போலீஸாருக்கு சிறைத் தண்டனை விதித்து சேலம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மார்ச் மாதம் 2000-ம் ஆண்டில் ஆத்தூர் மதுவிலக்கு போலீஸார் கெங்கவல்லியைச் சேர்ந்த மதிவாணன் என்பவரின் டிவிஎஸ்50 ஐப் பறிமுதல் செய்தனர். ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வண்டியைத் திருப்பித் தருவதாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில் மதிவாணன் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரிடம் தகவல் கொடுத்தார்.

அவர்களின் அறிவுரையின்படி ரூ.8 ஆயிரத்தை லஞ்சமாகக் கொடுத்தார் மதிவாணன். அப்போது ஆத்தூர் மதுவிலக்கு காவல் நிலையத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார், அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்தனர். காவல் நிலையத்தைச் சோதனையிட்டதில் அங்கு கட்டுகளாக வைக்கப்பட்டிருந்த பணத்தையும் கைப்பற்றினர். அங்கு சுமார் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் தனித்தனி கட்டுகளாகக் கிடைத்தன. அவற்றில் போலீஸாரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தன. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் போலீஸார் 22 போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

17 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கு

17 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையின் இடையில் 3 பேர் இறந்துவிட்டனர். சேகர், அருள்முருகன், ரவி, சாமிநாதன், காதர் ஷெரிஃப், மாத மாணிக்கம், தங்கராஜன் ஆகிய 7 பேருக்கு சேலம் ஊழல் தடுப்பு கண்காணிப்பு சிறப்பு நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது. மீதியுள்ள 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

7 போலீஸாருக்கும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.17 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் பணி ஓய்வு பெற்ற நிலையில் 3 பேர் பணியில் உள்ளனர்.

தண்டனை பெற்ற போலீஸாரில் சேகர் கடலூர் கடலோர காவல்துறை ஆய்வாளராக உள்ளார். அருள்முருகன் ஏற்காடு காவல்நிலைய ஆய்வாளராகவும், ரவி சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல் சிறப்பு உதவி ஆய்வாளராகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT