தமிழகம்

எண்ணூர் கடற்கரை பகுதியில் உள்ள பாறாங்கற்களை சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

செய்திப்பிரிவு

எண்ணூர் கடற்கரை பகுதியில் உள்ள பாறாங்கற்களில் படிந்துள்ள கச்சா எண்ணெய் படிமங்களை ரசாயன நீர் மூலம் சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற் கிடையே, தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியத்துக்கு விளக்கம் கேட்டு போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த மாதம் 28-ம் தேதி நடந்த கப்பல் விபத்தில் ஒரு கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. எண்ணூர் துறைமுகத் தில் இருந்து மாமல்லபுரம் கடற்கரை வரை கச்சா எண்ணெய் பரவியது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எண்ணூர் கடற்பகுதியில் உள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணி நேற்று 11-வது நாளாக நீடித்தது. இதுவரை 170 டன் எண்ணெய் படலம் அகற்றப்பட்டு உள்ளது.

இந்நிலையில், எண்ணூர் கடற்பகுதியில் கடல் அரிப்பைத் தடுப்பதற்காக கொட்டப்பட்டுள்ள பாறாங்கற்கள் மீது கச்சா எண்ணெய் படிந்துள்ளது. இவற்றை சுத்தப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, ரசாயன நீர், குழாய்கள் மூலம் பாறாங்கற்களின் மீது ஊற்றப்பட்டு தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, பொன்னேரி போலீஸார் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், கடலில் எவ்வளவு டன் கச்சா எண்ணெய் கலந்துள்ளது, இதன் காரணமாக சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைகோ வலியுறுத்தல்

கச்சா எண்ணெய் கடலில் பரவியதால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எண்ணூர் துறைமுகம் அருகே நிகழ்ந்த கப்பல் விபத்தில் ஒரு கப்பலில் இருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் சென்னையை ஒட்டிய கடற்பரப்பு முழுவதும் மிதந்து கொண்டிருக்கிறது.

இதனால் சென்னைக் கடற்கரை மீனவ மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மீன்களால் பாதிப்பு ஏற்படும் எனக்கருதி மக்கள் மீன்களை வாங்காமல் புறக்கணிப்பதால் மீனவர்கள் வருவாயின்றி தவிக்கின்றனர்.

கச்சா எண்ணெயில் கலந்துள்ள வேதிப்பொருட்கள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை. அதனால் சென்னைக் கடல் பரப்பில் எதிர்காலத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாதவாறு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மீனவர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT