தமிழகம்

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் திமுக ரயில் மறியல்

பிடிஐ

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று (வெள்ளிக்கிழமை) ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட பல திமுக தலைவர்கள் ரயில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கவும், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டத்தை உடனடியாக அமல்படுத்தவும் தமிழக முழுவதும் இளைஞர்கள் அமைதியான முறையில் தொடர்ந்து போரட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

சென்னையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் மூத்த திமுக தலைவர்கள் பங்கேற்று ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

மாம்பலம் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டபோது திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவருடைய ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

பெரும் ஆதரவு:

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மவுனப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நாகப்பட்டிணத்தில் படகு உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக படகு கடலில் செலுத்தப்படாது என்று கூறியுள்ளனர்.

மத்திய ரயில்வே அமைச்சர் வேண்டுகோள்:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரயில் மறியல்கள் நடந்து வருகின்றன.

ரயில் மறியல் போராட்டம் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறும்போது,"ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் ரயிலை மறித்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

SCROLL FOR NEXT