தமிழகம்

அனைத்து மாநகரங்களிலும் தானியங்கி மின் கட்டண வசூல் இயந்திரம்: அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

சென்னையைப் போல், தமிழகத்தின் மற்ற மாநகரங்களில் தானியங்கி மின் கட்டண வசூல் இயந்திரங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று, மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

சட்டப்பேரவை கூட்டத் தொடரில், கேள்வி நேரத்தின் போது, வேளச்சேரி எம்.எல்.ஏ. அசோக், "திருவான்மியூர், வேளச்சேரி துணை மின் நிலையங்களில் தானியங்கி மின் கட்டண வசூல் இயந்திரங்கள் அமைக்க அரசு ஆவன செய்யுமா?" என்று கேள்வி கேட்டார்.

அதற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன் அளித்த பதில்:

"திருவான்மியூர், வேளச்சேரி துணை மின் நிலையங்களில் தானியங்கி மின் கட்டண வசூல் இயந்திரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்பணி சில மாதங்களில் நிறைவடையும். சென்னையில் 100 மையங்களில் இந்த இயந்திரங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது 24 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி மின்கட்டண இயந்திரங்கள் மூலம் 32 ஆயிரம் நுகர்வோர் பயனடைந்து வருகின்றனர். 76 இயந்திரங்களை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சென்னையில் தில்லைகங்கா நகர், பெசன்ட்நகர் ஆகிய இடங்களில் விரைவில் தானியங்கி மின்கட்டண வசூல் இயந்திரங்கள் செயல்பட உள்ளன.

சென்னை மட்டுமல்லாமல் திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி போன்ற மாநகரங்களிலும் தானியங்கி மின் கட்டண வசூல் இயந்திரங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், 'ஆன் லைன்', செல்போன், வங்கிகள், தபால் அலுவலகங்கள் வாயிலாக மின்கட்டணம் வசூலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார் நத்தம் விஸ்வநாதன்.

SCROLL FOR NEXT