சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்க அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், தொழில்துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்தின் போது நெய்வேலி தொகுதி திமுக உறுப்பினர் சபா.ராஜேந்திரன் பேசுகையில், ''என் எல்சி நிறுவனம் உற்பத்தி செய்யும் 3990 மெகாவாட் மின்சாரத்தில் தமிழகத்துக்கு 1797 மெகாவாட் கிடைக்கிறது. இந்த நிறுவனம் கடந்தாண்டில் ரூ.1400 கோடி லாபம் பெற்றுள்ளது. இந்த லாபத்தொகை ராஜஸ்தான்,உத்தரபிரதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளில் முதலீடு செய்யப்படுகிறது. அந்த நிறுவனத்தில் தற்போது நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. 9 ஆயிரம்ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் நிரந்தரம் தொடர்பாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலம் உருக்காலை தற்போது நஷ்டத்தில் செல்வதாக கூறி தனியாருக்கு அளிக்க முடிவு செய்துள்ளனர். அதை தடுக்க வேண்டும்'' என்றார்.
இதற்கு பதிலளித்து தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசுகையில், ''என் எல்சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க முற்சிக்கும் போது, பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் அதன் பங்குகளை ரூ.358.20 கோடிக்கு வாங்க முதல்வர் உத்தரவிட்டார். அந்த தொகை தற்போது ரூ.446.57 கோடியாக உயர்ந்துள்ளது. அதே போல் சேலம் உருக்காலையையும் தனியாருக்கு போக இந்த அரசு அனுமதிக்காது. அந்த நிறுவனம் தேவையான தொகுப்பு உதவித்தொகையை கோரியுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இங்கிருக்கும் எந்த நிறுவனமும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படாது'' என்றார்.