பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட எஸ்ஆர்எம் குழும வேந்தர் பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது. அவரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரித்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.
மருத்துவப் படிப்பில் சேர இடம் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் ரூ.75 கோடி மோசடி செய்ததாக வேந்தர் மூவிஸ் நிறுவன உரிமையாளர் மதன், எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 26-ம் தேதி பச்சமுத்து கைது செய்யப்பட்டார்.
பச்சமுத்துவை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மனு செய்தனர். ஆனால், ஒருநாள் மட்டும் அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
அதன்படி, சென்னை எழும் பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து நேற்று காலை 7.30 மணி முதல் மாலை வரை பச்சமுத்துவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். மாணவர்கள் கொடுத்த பண மோசடி புகார்கள் குறித்தும், மதன் மாயமானது தொடர்பாகவும் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். விசாரணை முடிந்ததும் மாலை 5.30 மணிக்கு அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், ஜாமீன் கேட்டு பச்சமுத்து தாக்கல் செய்த மனு, சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பிரகாஷ் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே, பச்சமுத்து ரூ.1 கோடி செக் மோசடி செய்து விட்டதாகவும், அந்தப் பணத்தை கேட்டபோது கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தயாரிப்பாளர் போத்ரா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அந்தப் புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி பச்சமுத்து மீது மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.