தமிழகம்

குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி: நியாயவிலைக் கடைகளில் நாளை தொடங்கும்

செய்திப்பிரிவு

தமிழகத்தில், ஒரு கோடியே 91 லட்சத்து 53 ஆயிரத்து 352 அரிசி விருப்ப அட்டைகள் உட்பட 2 கோடியே 3 லட்சத்து 386 குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. தற்போதுள்ள குடும்ப அட்டைகள் கடந்த 2005-ம் ஆண்டு வழங்கப்பட்டவை. கடந்த 2009-ம் ஆண்டே காலாவதியான நிலையில் தொடர்ந்து ஆண்டுதோறும் உள்தாள் ஒட்டப்பட்டு வருகிறது.

பழைய குடும்ப அட்டைக்கு பதில் மின்னணு குடும்ப அட்டை(ஸ்மார்ட் கார்டு) வழங்குவதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டை எளிதாக்க விற்பனை முனைய இயந்திரம் கடைகளுக்கு வழங்கப் பட்டுள்ளன. இதில், தற்போது குடும்ப அட்டை விவரங்கள், ஆதார் விவரங்கள் இணைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் முடியாத காரணத்தால், ஸ்மார்ட் கார்டு வழங்குவது தள்ளி வைக்கப்பட்டுள் ளது. இது தொடர்பாக, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழகத்தில் 47 சதவீதம் குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண்களையும் இணைத்துள்ளனர். மேலும் 46 சதவீதம் அட்டைகளில் ஒருவர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இதனால்தான் தற்போது ஸ்மார்ட் கார்டு அளிக்க முடியவில்லை. விரைவில், ஸ்மார்ட் கார்டு வடிவமைப்புகள் முடிக்கப்பட்டு, முதலில் முழுமை யாக விவரங்கள் கொடுத்தவர் களுக்கு கார்டு வழங்கப்படும். அதற்கு 6 மாதங்கள் வரை ஆகலாம் என்பதால் தற்போது உள்தாள் ஒட்டப்படுகிறது’’ என்றார்.

உள்தாள் ஒட்டும் பணி தொடர்பாக, நியாயவிலைக் கடை ஊழியர் ஒருவர் கூறும்போது, “ஜனவரி 1-ம் தேதி விடுமுறை என்பதால், 2-ம் தேதி (நாளை) முதல் உள்தாள் ஒட்டும் பணி தொடங்கப்படும் திங்களன்று ஒரு குறிப்பிட்ட எண் கொண்டவர் களுக்கு முதலில் உள்தாள் ஒட்டு வோம். அதன்பின் செவ்வாய் கிழமை முதல், காலையில் பொருட்கள் வழங்கப்படும். மாலை யில் உள்தாள் ஒட்டும் பணி நடக்கும்’’ என்றார்.

பொங்கல் பரிசு உண்டா?

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி, வெல்லம் மற்றும் பணம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. கடந்த 2016-ல், ஜனவரி 6-ம் தேதி பொங்கலுக்கான சிறப்பு பரிசுத் தொகுப்பை மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதில் ஒருகிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு மற்றும் ஒவ்வொரு அட்டைக்கும் ரூ.100 வழங்கப்படும் என்றார். இதைத்தொடர்ந்து இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிகாரி விளக்கம்

இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “தற்போது உள்தாள் ஒட்டுவது தொடர்பாக அறிவித்து பணிகளை தொடங்க உள்ளோம். அடுத்த வாரத்தில் பொங்கல் பரிசு தொடர்பாக அரசு முடிவெடுத்து முதல்வர் அறிவிப்பார்’’ என்றார்.

SCROLL FOR NEXT