தமிழகம்

பெப்சி நிறுவன தலைமை நிர்வாகி இந்திரா நூயி வீட்டில் கொள்ளை

செய்திப்பிரிவு

பெப்சி குளிர்பான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான இந்திரா நூயியின் சென்னை தியாகராய நகர் வீட்டில் பணம், நகைகள் திருடப்பட்டன.

பெப்சி குளிர்பான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் இந்திரா நூயி (55). பெப்சியின் தலைமை அலுவலகம் அமெரிக்காவில் இருப்பதால் இவர் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக சென்னையில் தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை ஆகிய இடங்களில் பங்களா வீடுகள் உள்ளன. தியாகராயநகரில் உள்ள வீட்டில் இந்திரா நூயியின் தாயார் சாந்தா கிருஷ்ணமூர்த்தி மட்டும் வசித்து வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்திரா நூயியை பார்ப்பதற்காக சாந்தாவும் அமெரிக்கா சென்றுவிட்டார்.

வீட்டின் முக்கியமான அறை களை பூட்டிவிட்டு, தரை தளத்தில் காவலாளிகள் தங்குவதற்கான அறைகளை மட்டும் திறந்து வைத்துவிட்டு சாந்தா சென்றார். காவலாளிகள் வீரபத்ரன், ஓடிசா மாநிலத்தை சேர்ந்த மீர்குமார் மாலிக் (26) ஆகியோர் இந்த அறையில் தங்கி ஷிப்ட் முறையில் காவல் பணியை செய்து வந்தனர்.

பெப்சி நிறுவனத்தின் தென் மண்டல தலைமை அலுவலகம் மயிலாப்பூர் மடம் சாலையில் உள்ளது. பணியின் நிமித்தம் இந்திரா நூயி இந்த அலுவலகம் வரும்போது, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் தங்குவது வழக்கம். தி.நகர் வீட்டுக்கு வரமாட்டார். இந்நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு மயிலாப்பூர் அலுவலகத்துக்கு இந்திரா நூயி வந்துள்ளார். அவர் திடீரென தியாகராய நகரில் உள்ள வீட்டைப் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இந்த தகவல் வீட்டின் காவலாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வீட்டை சுத்தப்படுத்துவதற்காக புதன்கிழமை வீட்டின் மாடிக்கு சென்றனர். அப்போது அறைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. உடனே இதுகுறித்து இந்திரா நூயிக்கு தகவல் கொடுக்க, அவர் சென்னை காவல் ஆணையக அதிகாரியிடம் தொலைபேசியில் புகார் கொடுத்தார்.

உடனே பாண்டிபஜார் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து கைரேகைகளை சேகரித்தனர். 91 சவரன் நகைகள், பல லட்சம் பணம், தங்கத்தாலான பூஜை பொருட்கள், விலை உயர்ந்த கலை வேலைப்பாடுகள் மிகுந்த பொருட்கள் உட்பட ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் திருடு போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருக்கும் சாந்தா வந்த பிறகுதான் திருடுபோன பொருட்களின் உண்மையான மதிப்பு தெரியவரும்.

'கடந்த 6 மாதமாக வீட்டின் மாடிக்கு சென்று பார்க்கவில்லை. இதனால் திருட்டு எப்போது நடந்தது என்று தெரியவில்லை' என காவலாளிகள் இருவரும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒடிசாவை சேர்ந்த காவலாளி மீர்குமார் மாலிக்குக்கு இந்த திருட்டில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அவரிடம் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

போலீஸார் மழுப்பல்

இந்திரா நூயி வீட்டில் திருடு போனது குறித்து காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “அப்படி ஒரு திருட்டு சம்பவமே நடக்கவில்லை. வீட்டு காவலர்கள் சண்டை போட்டுக் கொண்டதால் அவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். மற்றபடி இந்திரா நூயி வீட்டில் திருட்டே நடக்கவில்லை” என்றனர்.

SCROLL FOR NEXT