தமிழகத்தில் மின் தட்டுப்பாட்டைப் போக்கவும் சுற்றுச்சுழல் மாசைக் கட்டுப்படுத்தவும் மரபு சாரா எரிசக்தி உற்பத்தியை ஊக்கப் படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 7,200 மெகாவாட் அளவுக்கு காற்றாலை மின் உற்பத்தி அனுமதிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே காற்றாலை உற்பத்தி யில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கிடையே, 2020க்குள் தமிழகத்தில் 3 ஆயிரம் மெகாவாட் சூரியசக்தி மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இதற்காக சூரிய மின்சக்தி கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதனடிப் படையில், தமிழகத்திலுள்ள அரசு கட்டிடங்களில் முன் மாதிரியாக சூரியசக்தி அமைப்புகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை மேற் கொண்டுள்ளது. சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகம், மரபுசாரா எரிசக்தி மேம்பாட்டு முகமை, தமிழக மாசு கட்டுப் பாட்டு வாரிய கட்டிடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் சூரிய சக்தி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆவின் பால் பதனிடும் மையங்களிலும் சூரிய சக்தி அமைப்புகள் அமைக் கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தின் முக்கியக் கோயில்களிலும் சூரிய சக்தி அமைப்புகள் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் 10 கிலோவாட், இருக்கன் குடி மாரியம்மன் கோயிலில் 5 கிலோவாட், குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் 5 கிலோவாட், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் 5 கிலோவாட், மதுரை கள்ளழகர் கோயிலில் 20 கிலோவாட், மதுரை கூடலழகர் கோயிலில் 20 கிலோவாட், வீரபாண்டி கவுமாரி யம்மன் கோயிலில் 5 கிலோவாட், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் 10 கிலோவாட், திருவாரூர் பிரம்மபூரீஸ்வரர் கோயிலில் 5 கிலோவாட், திருச்சி திருப்பைஞ்சிலி நீக்லிவனேஸ்வரர் கோயிலில் 5 கிலோவாட், சுவாமி மலை சுவாமிநாதர் கோயிலில் 10 கிலோவாட் என மொத்தம் 11 கோயில்களில் 100 கிலோவாட் சூரிய சக்தி அமைப்புகள் ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை துணையுடன், தமிழக எரி சக்தி மேம்பாட்டு முகமை மேற்கொண்டுள்ளது.