தமிழகம்

திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் 5 நாட்களுக்கு சுத்தம் செய்யும் பணி: 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறப்பு

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி நேற்று பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: நோய் பரவாமல் தடுக்க திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 கிராம ஊராட்சிகளில் அடங்கிய 3,861 குக்கிராமங்களில் இன்று (29-ம் தேதி) முதல் செப்.2 வரை முழு அளவிலான சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சிகள் பிரிக்கப்பட்டு, மேற்கண்ட 5 நாட்களிலும் சுகாதாரப்பணியை மேற்கொள்ளும் வண்ணம் செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை மற்றும் சுகாதாரத் துறையினர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காதாரப் பணியாளர்கள், தற்காலிக மஸ்தூர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், நேரு யுவகேந்திரா தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பள்ளி கல்லூரி மாணவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் மற்றும் இதர தன்னார்வலர்கள் என சுமார் 40 ஆயிரம் பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கொசு உற்பத்தி அழிப்பு

அரசு கட்டிடங்கள், பொது இடங்கள், மக்கள் கூடும் பகுதிகள், பள்ளி-கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் குப்பைகளை அகற்றுவது, கொசுப் புழுக்களை அகற்றுவது, கொசு உற்பத்தி ஆதாரங்களை அழிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

குடிநீர் ஆதாரங்கள் மற்றும் சேமிப்பிடங்களில் முழு அளவிலான சுத்தமும், சுகாதார விதிமுறைப்படி குளோரினேஷனும் உறுதி செய்யப்படும். தூய்மை மற்றும் நோய்த்தடுப்புக்கான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேந்திரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஜாகீர்உசேன், ஒன்றியக்குழுத் தலைவர் நாகம்மாள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதநாயகம், ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

கட்டுப்பாட்டு அறை திறப்பு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய் மற்றும் வைரஸ் காய்ச்சல் தொடர்பான தகவல்களை பொது மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கும் பொருட்டு கட்டணமில்லா தொலைபேசி எண்:1077 மற்றும் கைப்பேசி எண்: 7548846801, வாட்ஸ்-அப் எண்: 7548846803 மற்றும் தொலைபேசி எண்: 044 27665248 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT