தமிழகம்

மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் கள ஆய்வை அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ்

செய்திப்பிரிவு

மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் கள ஆய்வுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இத்தகைய அனுமதி மூலம் இந்தியரகளை சோதனை எலிகளாக மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி மாற்றியிருப்பதாகவும் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி, கோதுமை உள்ளிட்ட 200 வகையான பயிர்களை வயல்களில் பயிரிட்டு சோதனை நடத்துவதற்கு வீரப்பமொய்லி தலைமையிலான மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி அளித்திருக்கிறது. இது இந்திய விவசாயத்தை அமிலம் ஊற்றி அழிப்பதற்கு சமமானதாகும்.

இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து 2012-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிக்கை தாக்கல் செய்த மத்திய வேளாண்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவினர், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களால் மனித உடல்நிலை, பல்லுயிர் வாழ்நிலை, விதை இறையாண்மை, உணவுப்பாதுகாப்பு, பண்ணை வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும் என்பதால், இவ்விசயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்கக்கூடாது என பரிந்துரைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தொழில்நுட்பட்ப வல்லுனர் குழுவும், இந்தியாவில் வலிமையான ஒழுங்குமுறை அமைப்பு ஏற்படுத்தப்படும் வரை, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் கள ஆய்வுக்கு அனுமதி தரக் கூடாது என்றும் பரிந்துரைத்திருந்தது.

இத்தகைய நிலையில், யாரிடமும், ஆலோசிக்காமல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் கள ஆய்வுக்கு அனுமதி அளித்திருப்பதன் மூலம் இந்தியாவை பன்னாட்டு விதை நிறுவனங்களின் சோதனைக்களமாகவும், இந்தியர்களை சோதனை எலிகளாகவும் வீரப்ப மொய்லி மாற்றியிருக்கிறார். அவரது இந்த நடவடிக்கை மிகக் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களால் பாதிக்கப்படும் விவசாயம், சுகாதாரம் ஆகிய இரண்டு துறைகளும் மாநிலப் பட்டியலில் இருக்கும் நிலையில், மாநில அரசுகளிடம் கலந்து பேசாமல் கள ஆய்வுக்கு வீரப்ப மொய்லி அனுமதி அளித்திருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான செயலாகும். கள ஆய்வுகளால் ஏற்படும் பாதிப்புகள் ஈடுசெய்ய முடியாதவையாக இருக்கும் என்பதால் அதற்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

மேலும், இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் அடுத்த மாதம் விசாரிக்கப்படவுள்ள நிலையில், அவசர அவசரமாக கள ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்டதன் பின்னணி குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்". இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT