தமிழகம்

திருச்சி சிறையில் மாணவிகளிடம் அத்துமீறியதாக புகார்: வழக்கறிஞரின் குற்றச்சாட்டுக்கு சிறை கண்காணிப்பாளர் மறுப்பு

அ.வேலுச்சாமி

நெடுவாசல் போராட்டத்துக்கு ரயிலில் சென்றபோது கைது செய்யப் பட்ட சேலம் மாணவிகளி டம் சிறை விதிகளை மீறி அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை சிறை கண்காணிப்பாளர் மறுத்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் பொதுமக்களும், இளைஞர்களும் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக கடந்த 15-ம் தேதி கோவையிலிருந்து 2 மாணவிகள், 5 மாணவர்கள் என 7 பேர் ரயிலில் திருச்சிக்கு புறப்பட்டனர். அப்போது பறை இசைத்துக் கொண்டு, விழிப்புணர்வு வாசகங்களைக்கூறி பயணிகளிடம் நன்கொடை வசூலித்ததாக கூறப்படுகிறது.

கரூர் மாவட்டம் குளித்தலை ரயில் நிலையத்துக்கு வந்தபோது, அங்கு காத்திருந்த கரூர் ஏடிஎஸ்பி தங்கதுரை உள்ளிட்டோர் மாணவ, மாணவிகள் 7 பேரையும் கைது செய்து, ரயிலில் இருந்து அழைத்துச் சென்றனர். அவர்கள் மீது இ.த.ச 153 உட்பட 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து அன்றிரவே நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டையைச் சேர்ந்த எம்.ஏ. இதழியல் படிக்கும் மாணவியான வளர்மதி(23), அதே ஊரைச் சேர்ந்த மருத்துவ மாணவியான ஸ்வாதி (19) ஆகியோரை திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியிலுள்ள மகளிர் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், மாணவி களுக்கான வழக்கறிஞர் மதுரையைச் சேர்ந்த எஸ்.ராஜா கூறும்போது, “விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் கைதாகி சிறைக்கு வந்துள்ள, பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சட்ட உதவி செய்யும் நோக்கில் கடந்த 18-ம் தேதி திருச்சி மகளிர் சிறைக்குச் சென்று சந்தித்தேன். அப்போது, சிறைக்குள் தாங்கள் கொடுமைப்படுத்தப்படுவதாகக் கூறி அழுதனர். குறிப்பாக, கடந்த 15-ம் இரவு சிறைக்குள் கொண்டு வந்த பிறகு, 4 பெண் காவலர்கள் சேர்ந்து கட்டாயப்படுத்தி இருவரையும் நிர்வாணப்படுத்தியுள்ளனர். மேலும் ஆபாச வார்த்தைகளாலும் திட்டியுள்ளனர்.

இதுதவிர மகளிருக்கான அடிப்படை உரிமையான நாப்கின் கூட வழங்காமல் இருந்துள்ளனர். சிறைக்குள் மனித உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை தொடங்கியுள்ளோம். இரு மாணவிகளையும் ஜாமீனில் எடுக்க உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளோம்” என்றார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து திருச்சி மகளிர் சிறை கண்காணிப்பாளர் கோமளா விடம் கேட்டபோது, “சிறை வழக்கப்படி உள்ளே வரும் அனைத்து கைதிகளையும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனையிடுவது வழக்கம். ஆனால், மாணவிகளை நிர்வாணப்படுத்தி சோதனை யிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு பொய். அதேபோல, நாப்கின் வழங்கப்படவில்லை என்பதும் தவறான தகவல்” என்றார்.

SCROLL FOR NEXT