தெலங்கானா பிரச்சினையால் ஆந்திரமே இரண்டுபட்டு கிடக்கும் நிலையில், அப்பகுதியைக் கடந்து சீமாந்திராவை அடையும் கிருஷ்ணா நீர், பிரிவினைக்குப் பிறகு சென்னைக்கு வழக்கம்போல் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை நகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும், ஆந்திர மாநிலத்தின் பல நூறு கிலோ மீட்டர் கிராமங்களில் வசிக்கும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், தெலுங்கு கங்கை திட்டம் என்று அழைக்கப்படும், கிருஷ்ண நதிநீர்த் திட்டம் 2004-ம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி சென்னைக்கு 12 டிஎம்சி கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு ஆண்டுதோறும் இரு தவணைகளில் அளித்து வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ், ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீசைலம் அணையில் இருந்து, சென்னைக்கு பூண்டி நீர்த்தேக்கம் வழியாக குடிநீர் கொண்டு வரப்படுகிறது. வளைந்து, வளைந்து, வரும் வழி நெடுகிலும் சுமார் 400 கி.மீ. தூரத்துக்கு ஆந்திர கிராமங்களுக்கும் இந்த நீர் உபயோகப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தெலங்கானா தனி மாநிலம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், சீமாந்திரா பகுதிக்குத் தண்ணீர் தரமுடியாது என்று தெலங்கானா விவசாயிகள் முட்டுக்கட்டை போடத் தொடங்கியுள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், குடிநீர் தட்டுப்பாட்டில் சிக்கியிருக்கும் சென்னைக்கு இது மேலும் சிக்கலை உண்டாக்குமா? என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு அதிகாரிகளிடம் கேட்டபோது, நம்பிக்கைக்குரிய வார்த்தைகளை உதிர்த்தனர். அவர்கள் கூறியதாவது:
இத்திட்டத்தின் கீழ் 1983-ல் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, எத்தகைய சூழலிலும் சென்னைக்கு அவர்கள் தண்ணீர் தந்தே தீரவேண்டும். ஆந்திரா பிரிந்தாலும், சீமாந்திராவுக்கு, தெலங்கானா பகுதியினர் தண்ணீரை கொடுத்தே தீரவேண்டிய நிலை ஏற்படும். எனவே, சென்னைக்கு பாதிப்பு வராது என்று நம்புகிறோம். தற்போது, நாளொன்றுக்கு 240 கன அடி கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது. இது 800 கனஅடியாக விரைவில் உயரக்கூடும் என்றனர்.