தமிழகம்

நெல்லையில் 8-ம் வகுப்பு மாணவர் கொடூர கொலை

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம், மேலமுனைஞ்சிப்பட்டி பகுதியில் 8-ம் வகுப்பு மாணவர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது, தலை, கையை துண்டித்து வெவ்வேறு கிணறுகளில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மேலமுனைஞ்சிப்பட்டி முத்துவீரப்பபுரத்தை சேர்ந்தவர் விவசாயி சுடலை. இவரது மகன் இசக்கிதாஸ் (13). முனைஞ்சிப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை இரவு, அந்த கிராமத்திலுள்ள சிவன் கோயிலில் சொக்கப்பனை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேடிக்கை பார்க்க சக சிறுவர்களுடன் இசக்கிதாஸ் அங்கு சென்றிருந்தார். ஆனால், இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை கோயில் பகுதியில் பெற்றோர் தேடினர்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை, சிவன் கோயில் பகுதியிலுள்ள கிணற்றில் இசக்கிதாஸ் உடல் கிடந்தது. அவரது தலை துண்டிக்கப்பட்டு அருகிலுள்ள தண்ணீர் இல்லா கிணற்றில் வீசப்பட்டிருந்தது.

இதுபோல், அவரது கையில் மணிகட்டுவரையில் துண்டிக்கப்பட்டிருந்தது. அந்த கையில் இருந்த விரல்களும் துண்டிக்கப்பட்டு, அவரது கால்சட்டை பாக்கெட்டில் போடப்பட்டிருந்தன.

நாங்குநேரி டி.எஸ்.பி. கோவிந்தராஜ், ஆய்வாளர்கள் ரவி, லிங்கதிருமாறன் மற்றும் போலீஸார், உடல் பாகங்களை மீட்டு, பிரேத பிரசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இசக்கிதாஸ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. தலை, கையை துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

சிறுவனின் தந்தை சுடலைக்கும், வேறுயாருக்கும் முன்விரோதம் இருக்கிறதா என்று போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இசக்கிதாசுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு விளையாடிய சிறுவர்களிடமும் போலீஸார் விசாரித்தனர்.

ஒருவேளை நரபலிக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால் அப்பகுதியில் பூஜைகள் நடைபெற்றதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. எஸ்.பி. விஜயேந்திரபிதரி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

SCROLL FOR NEXT