திருநெல்வேலி மாவட்டத்தில், பல இடங்களில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரிந்தவர்களுக்கு, 6 மாதங்களாக ஊதியம் கிடைக்கவில்லை என, பாதிக்கப் பட்ட பெண்கள் ஆட்சியர் மு.கருணாகரனிடம் மனு அளித்தனர்.
அம்பாசமுத்திரம் தாலுகா, பிரம்மதேசம் பகுதியைச் சேர்ந்த பெண்கள், வட்டார விவசாயிகள் சங்கத் தலைவர் சு.கணபதி தலைமையில், ஆட்சியரிடம் அளித்த மனுவில், `ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்று வோருக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. கடன் வாங்கியும், பொருட்களை அடகுவைத்தும் பிழைப்பு நடத் துகிறோம். பணியாற்றியதற்கான ஊதியம் வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி பகுதியைச் சேர்ந்த பெண்களும், இதே கோரிக்கை யுடன் மனு அளித்தனர்.
மேலநீலிதநல்லூர் ஒன்றியம் மேசியாபுரம் அருந்ததியர் தெற்கு தெரு மக்கள், ஆதித்தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் கண்களில் கருப்பு துணி கட்டியபடி வந்து அளித்த மனு விவரம்: மேசியாபுரம் பகுதியில் அருந்ததியர் தெற்கு தெருவில், 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு, ஆழ்துளை கிணறு மற்றும் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், 3 மாதங்களாக குடிநீர் கிடைக்க வில்லை. கழிவுநீரோடையும் இல்லாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது.
பீடி தொழிலாளர்கள்
திருநெல்வேலி மாவட்ட பீடித் தொழிலாளர் சங்கம் சார்பில், ஆலங்குளம் வட்டாரத் தலைவர் பி.எஸ்.மாரியப்பன் தலைமையில் அளிக்கப்பட்ட மனு: ஆலங்குளம் பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் பல ஏக்கரில் உள்ளது. இதை வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனையாக அளிக்க வேண்டும்.
முதியோர் உதவித்தொகை
தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில பிரச்சார கமிட்டி தலைவர் ஏ.அ.செந்தில்குமாரசாமி உள்ளிட்டோர் அளித்த மனு: ஊத்து மலையில் முதியோர் உதவித் தொகை கேட்டு அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் உதவித்தொகை கிடைக்கச் செய்ய வேண்டும்.
சமூகரெங்கபுரம்
ராதாபுரம் தாலுகா, சமூகரெங்கபுரம் பகுதி மக்கள் அளித்த மனு: சமூகரெங்கபுரத்தில், வள்ளியூர்- சாத்தான்குளம் மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் மதுக்கடை உள்ளது. இந்த கடையை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாற்றப்பட வேண்டி இருப்பதால், சமூகரெங்கபுரத்தில் ஊருக்குள் திறக்க அவசரமாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு மதுக்கடை அமைந்தால் பொது மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் எனவே, மதுக்கடை அமைப்பதை கைவிட வேண்டும்.
தேமுதிக மனு
தேமுதிக மாநில பொதுக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் அளித்த மனு: மேலப்பாளையம் மண்டலம் 38-வது வார்டு பிள்ளை யார் கோயில் மேலத்தெருவில், கழிவுநீரோடை முறையாக அமைக்கவில்லை. கழிவுநீர் தேங்கி யிருக்கிறது. நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. கழிவுநீரை அகற்ற வேண்டும்.
இந்து தேசிய கட்சி
இந்து தேசிய கட்சி மாநில அமைப்பு செயலாளர் ஆர்.வன்னிமுருகேசன் தலைமையில் அக் கட்சியினரும், வள்ளியூர் பகுதி மக்களும் தட்டு ஏந்தி வந்து அளித்த மனு: வள்ளியூர் பகுதியில் வசித்து வரும் பிற்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பலர், பல தலைமுறைகளாக வீடின்றி கஷ்டப்படுகின்றனர். இந்த மக்களுக்கு மாவட்ட நிர்வாகம், இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலவச பயண அட்டை
தாமிரபரணி பார்வையற்றோர் முன்னேற்ற சங்கம் சார்பில், அதன் செயலாளர் டி.கெங்காதரன் உள்ளிட்டோர் அளித்த மனு விவரம்:
திருநெல்வேலி மாவட்டத்தில் பார்வையற்றோருக்கு இலவச பயண அட்டை புதுப்பித்து கொடுப் பதற்கு முகாம் அமைக்கப்படவில்லை. பயண அட்டையை புதுப்பிக்க தேவையான ஆவணங்களை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கொடுத்தால், அங்கிருந்து அரசு போக்குவரத்து கழக அலுவலகத்துக்கு அனுப்பி, மீண்டும் கிடைப்பதற்கு பல வாரங்கள் ஆகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இலவச பயண அட்டை புதுப்பிக்க முகாம் நடத்தியதுபோல், இவ்வாண்டும் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.