ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலாவின் தற்கொலை விவகாரம் சலசலக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் ப.செந்தில்குமார் கடந்த 2008-ல் இதே பல்கலைக்கழகத்தில் மர்மமான முறையில் இறந்தார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.
தங்கள் சோகத்தை 'தி இந்து' (ஆங்கிலம்) நாளிதழுடன் பகிர்ந்து கொண்டனர் செந்தில்குமாரின் பெற்றோர் பழனிச்சாமி (60), தெய்வானை (51).
சேலம் மாவட்ட ஜலகண்டபுரம் இவர்களது சொந்த ஊர். தொழில் பன்றி வளர்ப்பு. இருந்தாலும் தங்கள் மகனை நன்றாக படிக்க வைத்துள்ளனர். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி ஆய்வு படிப்பை மேற்கொள்ள செந்தில்குமாருக்கு வாய்ப்பு கிடைத்தது.
இயற்பியல் துறையில் ஆராய்ச்சிப் படிப்பை செந்தில்குமார் மேற்கொண்டுள்ளார். அவரது மேற்படிப்புச் செலவுக்காக பழனிச்சாமி கடன் வாங்கியிருந்தார்.
மகன் படிப்பை முடித்து குடும்பத்தின் நிலையை உயர்த்துவான் என பழனிச்சாமி தம்பதி காத்திருந்தபோதே அந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து பழனிச்சாமி கூறும்போது, "2008 பிப்ரவரி 24-ம் தேதி என் மகன் இறந்துவிட்டதாக எனக்கு தகவல் வந்தது. எங்கள் குடும்பத்துக்கு செந்தில்குமார் இறப்பு ஈடு செய்யமுடியாத இழப்பு.
கல்லூரியில் இருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு வந்து சென்றபோதுகூட செந்தில் கல்லூரியில் சாதி பாகுபாடு இருப்பதாக எங்களிடம் கூறியதில்லை. ஆனால், சாதி பாகுபாட்டினால் ஏற்பட்ட வலி காரணமாகவே செந்தில்குமார் தற்கொலை செய்து கொண்டதாக அவரது நண்பர்கள் எங்களிடம் கூறினர். செந்தில் இறந்த செய்தி ஒருவாரத்துக்குப் பின்னரே எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதுவும் பல்கலைக்கழக நிர்வாகிகளால் தெரிவிக்கப்படவில்லை" என்றார்.
செந்திலின் தாய் தெய்வானை ஜலகண்டபுரம் டவுன் பஞ்சாயத்தின் முன்னாள் கவுன்சிலர். அவர் நம்மிடம் கூறும்போது, "செந்தில் மிக நன்றாக படிப்பார். அவருக்கு அப்துல் கலாம் போல் விஞ்ஞானியாக வேண்டும் என்றே விருப்பம். ஆனால், அவர் தற்கொலை முடிவு எடுப்பார் என நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை.
செந்தில் பிரேதபரிசோதனை அறிக்கையோ, அவரது உடைமைகளோ எங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. நாங்களும் பலமுறை முயற்சித்துவிட்டோம். செந்தில் பல்கலைக்கழகத்தில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டதாக அவரது நண்பர்கள் என்னிடம் கூறினர்.
செந்திலுக்கு தனியாக கண்காணிப்பாளார் ஒதுக்கப்படவில்லையாம். இதனால் செந்தில் மிகவும் வருந்தியதாக அவரது நண்பர்கள் கூறினர்.
அதேபோல், அவரது ஆராய்ச்சி தொடர்பான கட்டுரைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தலித் என்பதாலேயே அவருக்கு இவை நடந்ததாக அவரது நண்பர்கள் என்னிடம் கூறினர்.
என் மகன் சாதிப் பாகுபாட்டால் இறந்துவிட்டார். இன்று இன்னொரு மாணவன் அதே பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்துள்ளது அங்கு இன்னமும் சாதிப் பாகுபாடு இருப்பதையே உணர்த்துகிறது" என்றார்.