சென்னையில் கடற்கரையை யொட்டிய பகுதிகளில் மட்டும் அரிய நிகழ்வான சந்திரகிரகணத்தை நேற்று பார்க்க முடிந்தது.
இந்தாண்டின் 2-வது சந்திர கிரகணம் நேற்று பகல் 1.43 மணிக்கு தொடங்கி இரவு 7.04 மணி வரை நீடித்தது. இந்தியாவில் கடற்கரை நகரங்களில் உள்ள மக்கள் மட்டும் இதனை தெளிவாகக் காண முடியும் என்று பிர்லா கோளரங்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைத்து விடும். இந்த நிகழ்வே சந்திர கிரகணம் என அழைக் கப்படுகிறது. இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 2.44 மணிக்குத் தொடங்கி மாலை 6.05 மணி வரை சந்திர கிரகணம் நிகழும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இக்காட்சியினை காண்பதற்காக, மெரினா கடற்கரையில் நேற்று மாலை மக்கள் குவிந்திருந் தனர். எனினும், மாலை 5.54 மணிக்கு லேசான மேக மூட்டம் காணப்பட்டதால், கிரகணம் முழுமையாக தெரியவில்லை. லேசாகவேதான் தெரிந்தது. பின்னர், சில நிமிடங்கள் கழித்து 6.10 மணிக்கு சந்திரன் கருஞ்சிவப்புடன் காட்சியளித்தது. அந்த அழகிய காட்சி 6.15 மணி வரை நீடித்தது. பின்னர், கருஞ்சிவப்பு நிறம் படிப்படியாக குறைந்து இயல்பான நிறத்தில் நிலவு காட்சியளித்தது. அதனை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சந்திர கிரகணத்தை மக்கள் காணும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதும், கிரகணத்தை அங்கு தெளிவாக காண முடியவில்லை.
சந்திரகிரகணத்தையொட்டி, சென்னையில் உள்ள மயிலை கபாலீஸ்வரர் கோயில், சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட முக்கியமான கோயில்களின் நடை நேற்று மதியம் 2 முதல் மாலை 6 மணி வரையில் மூடப்பட்டு இருந்தது. பின்னர் பூஜைகள் செய்து கோயில்கள் திறக்கப்பட்டன