மதுரை உயர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜராக வந்த சசிகலா புஷ்பா எம்பி, சொந்த ஊரில் இருந்து வந்த ஆதரவாளர்களுடன் காரில் ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது இந்தத் திடீர் ‘சமுதாய’பாசம் ஆளும்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தன்னை அடித்தார் என்று மாநிலங்களவையில் பகிரங்கமாக குற்றச்சாட்டு தெரிவித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியவர் சசிகலா புஷ்பா எம்பி. அடுத்த சில மணி நேரத்திலேயே, அவரும், அவரது ஆதரவாளர்களும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். அதிமுகவினருக்குப் பயந்து, தமிழகம் வந்தால் தனக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி சசிகலா புஷ்பா கடந்த 28 நாட்களாக டெல்லியிலேயே தங்கியிருந்தார்.
இந்நிலையில் அவரது வீட்டில் பணிபுரிந்த 2 பெண்கள் அளித்த புகாரின்பேரில், தூத்துக்குடியில் உள்ள புதுக்கோட்டை போலீஸார் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப்ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரியிருந்த அவர்கள் 4 பேரும் நேரில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்த சசிகலா புஷ்பா, உத்தங்குடி ரிங் ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டலில் சிறிது நேரம் தங்கியிருந்தார்.
அவரை பார்க்க அவரது ஆதரவாளர்கள் அரிநாடார் தலைமையில் 10 கார்களில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து வந்திருந்தனர். இதில் சில சினிமா சண்டை கலைஞர்களும் இருந்தனர். உயர் நீதிமன்றம் செல்வதற்கு முன், துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் ஆதரவாளர்கள் புடை சூழ விளக்குத்தூண் காமராஜர் சிலைக்கு சென்று மாலை அணிவித்தார். ஊர்வலமாக வந்த அனைத்துக் கார்களிலும் காமராஜர் படம் ஒட்டப்பட்டிருந்தது. அதனால், ஏதோ சமுதாயம் சார்ந்த தலைவர்கள்தான் அங்கு வந்துள்ளதாக தோற்றம் ஏற்பட்டது.
செய்தியாளர்களிடம் சசிகலா புஷ்பா கூறுகையில், “அரசியல் ரீதியாக பழிவாங்க என் மீது அவதூறு வழக்குகள் போட்டுள்ளனர். இந்த வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன். எனக்கு இருக்கும் ஒரே பாதுகாப்பு எம்பி பதவி மட்டுமே. எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் எம்பி பதவியை ஒருபோதும் ராஜினாமா செய்யமாட்டேன்” என்றார்.
மதுரை விமானநிலையத்தில் வந்து இறங்கியது முதல், உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி புறப்பட்டு சென்றது வரை பெரிய அரசியல் கட்சித்தலைவர்களைக் கண்காணிப்பதுபோல் சசிகலா புஷ்பாவை உளவுத்துறை போலீஸார் பின்தொடர்ந்து சென்றனர்.
சசிகலா புஷ்பாவும், உளவுத்துறை போலீஸார், ஆளும்கட்சியினருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மதுரையில் தன்னை வரவேற்கவும், காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க ஏற்பாடு செய்யவும், சொந்த ஊரில் இருந்து தனது சமுதாய ஆட்களை திரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. அரசியல் நெருக்கடியை சமாளிக்க சசிகலாபுஷ்பாவின் கையில் எடுத்துள்ள சமுதாயம் சார்ந்த அரசியல் நடவடிக்கை ஆளும்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஜாதி அரசியலை கையில் எடுத்தது ஏன் ?
சசிகலா புஷ்பாவிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
காமராஜர் சிலைக்கு திடீரென்று மாலை அணிவிக்க என்ன காரணம்?
நீங்களே சொல்லிவிட்டீர்கள் பெருந்தலைவரென்று, அதற்காகதான் மரியாதை செலுத்த வந்தேன்.
திராவிடக் கட்சியில் இருந்து வந்துவிட்டு திடீரென்று காமராஜர் அனுதாபியாக காட்டி கொள்வது ஏன்?
காமராஜர் மீதான பற்று திடீரென்று வரவில்லை. சிறுவயதில் இருந்தே அவர் மீது நல்ல மதிப்பும், மரியாதையும் உண்டு.
இதுரை நீங்கள் சார்ந்த சமுதாயத்தினரை கண்டுகொள்ளாமல் உங்களுக்கென்று தனிப்பட்ட பிரச்சினை வந்ததால்தான் சமுதாய ரீதியான அரசியலை கையில் எடுப்பதாக கூறப்படுகிறதே?
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் அதிமுகவில் இருந்தபோதும் எங்கள் சமுதாயத்தினருடன் இணக்கமாக செயல்பட்டு வந்துள்ளேன். சமுதாயம் சார்ந்த நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்துள்ளேன்.
உங்களை திமுக-காங்கிரஸ் கட்சிகள் பின்னணியில் இருந்து இயக்குவதாக கூறப்படுவது பற்றி?
திமுகவில் பெண்களுக்கு மரியாதை கொடுக்கின்றனர். பாதுகாப்பு இருக்கிறது. காங்கிரஸ், திமுக கட்சிகள் மாற்று கட்சி எம்பி என்றுகூட பாராமல் என்னுடைய பாதுகாப்புக்காக குரல் கொடுத்தனர். அவர்களை மதிப்பதற்கு அதுதான் காரணம் என்றார்