கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நேற்று கார் மீது லாரி மோதியதில் 3 பெண்கள் உயிரிழந்தனர்.
கோவை பீளமேட்டைச் சேர்ந்தவர் குப்புராம்(84). திருச்சியில் நடைபெற்ற திருமண விழாவுக்கு குடும்பத்துடன் வந்தார். பின்னர், அவரது குடும்பத்தினர் கோவைக்கு காரில் புறப்பட்டனர். அவரது மனைவி லட்சுமிபாய்(76), மகன் கோபிநாத்(35), அவரது மகள் தர்ஷினி(13), குப்புராமின் மகள் வழி பேத்தி சாஸ்திரிகா(10), உறவினர் ராஜேஸ்வரி(37) ஆகியோர் காரில் வந்தனர். காரை கோபிநாத் ஓட்டினார். குப்புராம், தனது மகளுடன் பேருந்தில் கோவைக்குப் புறப்பட்டார்.
குளித்தலை அருகே வதியம் புறவழிச் சாலையில் கார் வந்தபோது, அவ்வழியே ஜல்லிக் கற்கள் ஏற்றி வந்த லாரி, கார் மீது மோதியது. இதில் கார் நொறுங்கியது. பலத்த காயமடைந்த லட்சுமிபாய், தர்ஷினி, ராஜேஸ்வரி ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த கோபிநாத், சாஸ்திரிகா ஆகியோர் திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
குளித்தலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர். விபத்து காரணமாக கரூர் -திருச்சி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.