தமிழகம்

ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

செய்திப்பிரிவு

ஸ்டாலினுக்கு மத்திய அரசின் சிறப்புப் படை பாதுகாப்பு வழங்கக் கோரி, பிரதமருக்கு திமுக தலைவர் கருணாநிதி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 24-ம் தேதி கட்சியில் இருந்து திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதுதொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை நிருபர்களுக்கு பேட்டி அளித்த திமுக தலைவர் கருணாநிதி, ‘கடந்த 24-ம் தேதி அதிகாலை என் வீட்டுக்கு வந்த அழகிரி, இன்னும் மூன்று, நான்கு மாதங்களில் ஸ்டாலின் செத்து விடுவார் என்று உரத்தக் குரலில் கூறினார். அதைக் கேட்டு என் இதயமே நின்றுவிடும்போல இருந்தது’ என்று உருக்கமாக தெரிவித்தார். இது அபாண்டமானது என அழகிரி பதிலளித்தார்.

இந்நிலையில், ஸ்டாலின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாலும், கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக ஸ்டாலின் செயல்படுவார் என்பதாலும் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி பிரதமருக்கு கருணாநிதி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக திமுக தலைமை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் கடிதம், நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டதாகவும், அவர் வியாழக்கிழமை பிரதமரை சந்தித்து கடிதத்தை வழங்குவார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், புதன்கிழமையே அந்தக் கடிதம் தொலைநகல் மூலம் பிரதமருக்கு அனுப்பப்பட்டதாகவும் அதன் நகல் மத்திய உள்துறைக்கும், குடியரசுத் தலைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. புதன்கிழமை அறிவாலயத்துக்கு வந்த ஸ்டாலினிடம் இதுபற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

கடந்த 2006-ம் ஆண்டு ஸ்டாலின் மதுரைக்கு சென்றபோது, கத்தியுடன் அவரை நெருங்க முயன்ற ஒருவரை திமுகவினர் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து ஸ்டாலின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, மத்திய அரசின் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

தற்போது அவருக்கு இசட் பிரிவின் கீழ், ஆயுதம் தாங்கிய மத்திய ரிசர்வ் போலீஸார் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

ஆனால், அவருக்கு இசட் பிளஸ் பிரிவில் பாதுகாப்பு பெற திமுக தலைமை முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதாவுக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் இசட் பிளஸ் பிரிவில் கருப்புப் பூனைப் படையினர் பாதுகாப்பு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT