தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.264 குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாகவே இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.264 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.20,136-க்கும் ஒரு கிராம் ரூ.2,517-க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் கிராம் ரூ.2,550 ஆகவும், ஒரு பவுன் ரூ.20,400 ஆகவும் இருந்தது.
வெள்ளி விலையிலும் சரிவு காணப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி 60 பைசா குறைந்து ரூ.40.30-க்கும், கிலோவுக்கு ரூ.595 குறைந்து ரூ.37,620-க்கும் விற்பனையானது.
தங்கம் விலை குறைந்துள்ளது குறித்து சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி கூறும்போது, ‘‘கடந்த வாரங்களில் இல்லாத அளவு சர்வதேச அளவில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அமெரிக்காவில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் பெரும்பாலோர் வெளியில் செல்ல மாட்டார்கள். அங்குள்ள முதலீட்டாளர்கள் தங்கம் போன்ற பொருட்களில் முதலீடு செய்யாமல் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் அடுத்து வரும் மாதங்களிலும் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனே காணப்படும்’’ என்றார்.