ஹெலிகாப்டரில் பறந்து சென்று நிச்சயதார்த்தம்.. பிறகு ஹெலிகாப்டரிலேயே பெண் அழைப்பு.. திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் ஒரு மணி நேரம் ஹெலிகாப்டரில் ரைடு - ஊரே வியக்கும் வண்ணம் இப்படியொரு பிரம்மாண்ட திருமண விழாவைக் காண தயாராகிக் கொண்டிருக்கிறது காரைக்குடி அருகிலுள்ள எஸ்.ஆர்.பட்டினம் கிராமம்.
எஸ்.ஆர்.பட்டினத்தைச் சேர்ந்த வர்கள் ஆறுமுகம் - கண்ணகி தம்பதி. இவர்களின் இளைய மகன் கவுதமனுக்குதான் இந்த ‘ஹெலிகாப்டர்’ திருமணம். அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்த ஆறுமுகம், 40 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக பிரான்ஸுக்குப் போனவர். உழைப்பால் உயர்ந்து அங்கு குடியுரிமை பெறுமளவுக்கு தனது செல்வாக்கை உயர்த்திக் கொண்டார். ஆறுமுகத்துக்கு 2 மகன்கள், ஒரு மகள். இளைய மகனான கவுதமன் ஐரோப்பிய நீதிமன்றத்தில் சட்ட ஆலோ சகராகவும் மொழி பெயர்ப்பாள ராகவும் இருக்கிறார்.
இவருக்கும் அறந்தாங்கியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகநாதன் மகள் பானுப்பிரியாவுக்கும் எஸ்.ஆர்.பட்டினத்தில் நாளை திருமணம் நடக்கிறது. முன்னதாக இன்று காலை அறந்தாங்கியில் உள்ள மணமகள் வீட்டில் நிச்சய தார்த்தம் நடக்கிறது.
நிச்சயதார்த்தையும் திருமணத் தையும் வித்தியாசமாக நடத்த திட்டமிட்ட கவுதமன் குடும்பத்தினர், இதற்காக ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர். இன்று காலை ஹெலிகாப்டரில் அறந்தாங்கி செல்கிறார் புதுமாப்பிள்ளை. அங்கு நிச்சயதார்த்தம் நடக்கும்போது ஹெலிகாப்டரில் இருந்து சுமார் 100 கிலோ மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிச்சயதார்த்தம் முடிந்ததும் மணப் பெண்ணை அழைத்துக் கொண்டு ஹெலிகாப்டரிலேயே எஸ்.ஆர்.பட்டினம் வருகிறார் கவுதமன். இரவு கானா பாலாவின் இசைக் கச்சேரியுடன் திருமண விழா தொடங்குகிறது. நாளை காலை திருமணம் நடக்கும்போதும் ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதியர் ஹெலிகாப்டரில் ஒரு மணி நேரம் ரைடு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எஸ்.ஆர்.பட்டினத்தில் உள்ள கவுதமன் குடும்பத்துக்கு சொந்தமான பண்ணைத் தோட்டத்தில்தான் திருமணம். இதற்காக, சினிமா ஆர்ட் கலைஞர்களைக் கொண்டு திருமண மண்டபம் போல செட் போடப்பட்டுள்ளது. இந்த மண்டபம் முழுக்க குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. செட் போட வேண்டும் என்பதற்காகவே பண்ணைத் தோட்டத்தின் ஒரு பகுதியில் ஓராண்டாக விவசாயம் ஏதும் செய்யாமல் போட்டு வைத்திருந்தார்களாம். திருமண ஏற்பாடுகள் குறித்து ‘தி இந்து’விடம் பேசிய கவுத மனின் அண்ணன் ரெமி, ‘‘என் திருமணத்தை எல்லோரும் வியக்கும் வண்ணம் வித்தியாசமாக நடத்த திட்டமிட்டோம். ஆனால், குறுகிய கால இடைவெளிக்குள் பெண் பார்த்து திருமண தேதி குறிக்கப்பட்டுவிட்டதால் அது முடியாமல் போய்விட்டது. இப்போது எனது தம்பி திருமணத்தை நாங்கள் நினைத்தபடி விமரிசையாகவும் வித்தியாசமாகவும் நடத்துகிறோம். ஹெலிகாப்டர் சர்வீஸுக்கு பர்மிஷன் வாங்கவே ஒரு மாதம் ஆகிவிட்டது’’ என்றார். வழக்கமாக திருமணச் செலவு களை லட்சங்களில் கணக்கு சொல் வார்கள். ஆனால், இந்தத் திரும ணத்துக்கான செலவை கோடிகளில் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
வாடகை ரூ.15 லட்சம்
இந்த திருமணத்துக்காக சென் னையைச் சேர்ந்த க்ளைடர் ஏவியேஷன் நிறுவனம் மூலம் ஹெலிகாப்டர் வாடகைக்கு அமர்த்தப் பட்டுள்ளது. இதற்கான வாடகை மட்டுமே ரூ.15 லட்சம் என்கிறார்கள். அதுமட்டுமின்றி, ஒருமுறை மேலேழும்பி பறப்பதற்கு ரூ.50 ஆயிரம் கட்டணமாம். ஹெலி காப்டர் இறங்குவதற்காக அறந்தாங் கியிலும் எஸ்.ஆர்.பட்டினத் திலும் ஹெலிபேடுகள் அமைக்கப் பட்டுள்ளன.