கோயம்பேடு சந்தையில் உரிமம் புதுப்பிக் காத, பராமரிப்பு கட்டணம் செலுத்தாத 25 கடைகளுக்கு கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக் குழு அலுவலகம் சீல் வைத்துள்ளது.
கோயம்பேடு சந்தையில் கடைகள் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமக் கட்டணம் செலுத்தி, தங்கள் உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். மேலும் சந்தையில் துப்புரவுப் பணி மேற்கொள்வதற் காக பராமரிப்புக் கட்டணமும் செலுத்த வேண்டும்.
அவ்வாறு உரிமம் பெறாத, பராமரிப்புக் கட்டணம் செலுத்தாத கடைகள் குறித்து, கோயம்பேடு சந்தை நிர்வாகக் குழு அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். அதில் 140 கடைகள் உரிமம் பெறாமலும், பராமரிப்புக் கட்டணம் செலுத்தாமலும் இருப்பது தெரிய வந்தது. அவற்றுக்கு சீல் வைக்க சிஎம்டிஏ நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டது. அனுமதி கிடைத்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக 25 கடைகளுக்கு சீல் வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோயம்பேடு சந்தை நிர்வாகக் குழு அதிகாரி ஒருவர் கூறும்போது, மீதம் உள்ள கடைகளுக்கு அடுத்த சில தினங்களில் சீல் வைக்கப்படும் என்றார்.