திமுகவை நாங்கள் கூட்டணிக்கு அழைக்கவில்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பல்வேறு கட்சியினர், மத போதகர் கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட் டோர் பா.ஜ.க.வில் இணையும் நிகழ்ச்சி, சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது.
ஐக்கிய ஜனதாதள நிர்வாகி தர்மன் யாதவ், தேமுதிகவை சேர்ந்த பெரியகுளம் சாகுல் ஹமீது, தஞ்சை திமுக கிளைச் செயலர் நஸீர்கான், ஜெருசலேம் ஜெபக்குழுத் தலைவர் ஆல்பர்ட், 20 கிறிஸ்தவ போதகர்கள் மற்றும் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர், பா.ஜ.க. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
பிரதமர் அலுவலக நிதி ஆலோசனைப் பிரிவில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி நாராயணனும் பா.ஜ.க.வில் இணைந்தார்.
பின்னர், நிருபர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சிக் கூட்டம், திருச்சியில் வரும் 3-ம் தேதி நடக்க உள்ளது. இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவ தைக் கண்டித்து, பாம்பனில் ஜனவரி 31-ம் தேதி கடல் தாமரை போராட்டம் நடத்தப்பட உள்ளது. இதில், பா.ஜ.க. நாடாளுமன்றத் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார்.
தமிழகத்தில் இருந்து ஒருவர் நாட்டுக்கு தலைமையேற்க காலம் கனிந்திருக்கிறது என்று அதிமுக தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, அவர்களின் உரிமை. இதுகுறித்து, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
நாட்டுக்குத் தலைமையேற்று, இந்தியத் தமிழர்கள் மட்டுமின்றி உலகத் தமிழர்கள், தமிழக மீனவர்களுக்கு நல்லது செய்ய நரேந்திர மோடியால் மட்டுமே முடியும். அவர் தமிழராகவும் இருந்து தமிழர்களுக்கு நல்லது செய்வார்.
திமுகவை நாங்கள் கூட்டணியில் சேர அழைக்கவில்லை. நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்று, எங்களோடு இணைந்து உழைக்கத் தயாராக இருக்கும் கட்சிகளைத்தான் அணியில் சேர்ப்போம். தற்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கு நான்கு மாதங்கள் உள்ளதால், கூட்டணி தொடர்பாக யாரிடமும் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.