வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில், வடக்கு ஆந்திர கடற்கரைக்கு அப்பால், வெள்ளிக்கிழமை உருவான, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது. இதன் காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு, வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பில்லை.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 26 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
காரைக்குடியில் 7 செ.மீ மழை பதிவு
பதிவான மழை விவரங்களின் அடிப்படையில் கடந்த 24 மணி நேரத்தில் காரைக்குடி, சேத்தியாத்தோப்பு பகுதியில் 7 செ.மீ, காரைக்காலில் 6 செ.மீ, திருவிடைமருதூரில் 5 செ.மீ, சேலம், வாழப்பாடி, கொடுமுடி, பரமத்திவேலூர், தேவகோட்டை, திருக்கோயிலூர், பாப்பிரெட்டிபட்டி, ஓசூர், மதுரையில் தலா 4 செ.மீ, சென்னையில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
6 சதவீதம் மழை குறை
தென்மேற்கு பருவமழை காலத்தில், கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 179 மி.மீ மழை கிடைத்துள்ளது. இம்மாதத்தின் இயல்பான மழை பொழிவு 190 மி.மீ. இந்த மாதம் இயல்பை விட 6 சதவீதம் மழை குறைவாக கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் பரவலாக மழை
சென்னையில் காலையிலிருந்தே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் 2 மணி அளவில் நகரின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து, சென்னையை குளிர்வித்தது.