திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த அமராவதி அணை மூலமாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். அணை யின் நீர்பிடிப்புப் பகுதியில் போதிய மழை இல்லாததால், அணையின் பெரும் பகுதி பாலைவனம்போல் காணப்படுகிறது. மேலும், கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும் அணைப் பகுதி மாறியுள்ளது.
சுமார் 150 கி.மீ. தொலைவு கொண்ட அமராவதி ஆறும் வறண்டு, வழியோர கிராமங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல் இழந்துள்ளன. மடத்துக்குளம், காரத் தொழுவு, கணியூர், தளவாய்பட்டிணம், தாராபுரம், சின்னதாராபுரம் உட்பட பல்வேறு பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
பெரும்பகுதி விவசாய நிலப் பரப்புகள் சாகுபடியின்றி தரிசாக விடப்பட்டுள்ளன. சில பகுதிகளில் மட்டும் கிணற்று நீர், ஆழ்குழாய் நீராதாரத்தைக் கொண்டு, விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அமராவதி பாசன விவசாயிகள் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.வீரப்பன் கூறும்போது, “கடந்த ஆண்டு 4 முறை அணை நிரம்பி தண்ணீர் வீணானது. இந்த ஆண்டு அரை டி.எம்.சி. தண்ணீருக்காக விவசாயிகள் காத்திருக்கும் நிலை உள்ளது.
விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லை. போதிய நீர் நிர்வாகம் இல்லாததே இதற்குக் காரணம். ஆயிரக்கணக்கான மின் மோட்டார்களைப் பொருத்தி தனியார் நிறுவனங்கள் நீரை உறிஞ்சிவிடுவதால், விவசாயிகளுக்கு உரிய நீர் கிடைப்பதில்லை. இதனைக் கண்டித்து விரைவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறும்போது, “பருவமழை பொய்த்ததால், அணைக்கான நீர் கிடைக்கவில்லை. 1.1.2016-ல் அணையின் முழுக் கொள்ளளவும் (90அடி) நிரம்பியது. தொடர்ந்து 35 நாட்கள் பெய்த மழையால், விவசாயிகள் கேட்காமலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நவம்பரில், சிறப்பு நனைப்புத் திட்டத்துக்கும் திறக்கப்பட்டது. சுமார் 4 டி.எம்.சி நீரை தேக்கி வைக்க முடியாத சூழல் நிலவியது. கடந்த ஜனவரி 24, 25, 26 ஆகிய 3 நாட்கள் குடிநீருக்காக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.
நேற்று முன்தின நிலவரப்படி 36 அடியாக இருந்தது. ஆனால், அணைக்கு நீர் வரத்து இல்லை. மடத்துக்குளம், தாராபுரம் பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் குடிநீருக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என கோரி வருகின்றனர். இதுகுறித்து அரசின் ஒப்புதலுக்காக கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் தண்ணீர் திறக்கப்படும்” என்றனர்.