மருத்துவர் சரவணன் மரணத்தில் சந்தேகம் இருப்பதால், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து சரியான தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் பட்டமேற்படிப்பு படித்து வந்த திருப்பூர் சரவணன் மர்மமான முறையில் விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன.
சரவணன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது அவரை கொலை செய்தார்களா என்பதே மர்மமாக உள்ளது. எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவருக்கே இந்த நிலை என்றால், மற்றவர்கள் நிலை என்ன என்ற மிகப்பெரிய கேள்விக்குறி அனைத்து மருத்துவ மாணவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ மாணவர்களுக்கு சரியான விளக்கத்தை அளிக்கும் வகையில், இறந்த மாணவர் சரவணன் உண்மையில் தற்கொலை தான் செய்து கொண்டாரா அல்லது திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா இதுபோன்ற சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்து சரியான தீர்ப்பை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கிட வேண்டும்.
மருத்துவ மாணவர் சரவணனுக்கு உரிய நியாயம் கிடைத்திட தமிழகஅரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.