ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏராளமான இளைஞர்கள் சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைந்து போராடுவதால் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டனர்.
கடற்கரையைச் சுற்றியுள்ள சாலைகளான திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, பைகிராப்ட்ஸ் சாலை, சிவானந்தாசாலை, வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, ஐஸ்ஹவுஸ் ரோடு உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து காணப்பட்டது. முதன்மைச் சாலைகள் மட்டுமல்லாமல் கிளை சாலைகளிலும் நெரிசல் ஏற்பட்டது.
இதனால், கடற்கரை சாலையை நோக்கி வரும் பேருந்துகளும், அண்ணா சதுக்கத்தில் இருந்து செல்லும் பேருந்துகளும், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்பகுதியைக் கடந்து செல்லவே சுமார் ஒரு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது.
குறிப்பாக காமராஜர் சாலையில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் வேலைக்கு சென்று வீட்டுக்குத் திரும்புவோர் அவதிப்பட்டனர். சில இடங்களில் வாகன ஒட்டிகள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டனர்.