பாம்பாற்றின் குறுக்கே பட்டிச்சேரி என்ற இடத்தில் அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரி பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவை மீறும் வகையில் கேரள அரசு மேற்கொள்ளும் மற்றொரு நடவடிக்கை குறித்து தங்களது உடனடி கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அமராவதி ஆற்றின் நீர்வரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமராவதி ஆற்றின் கிளை நதியான பாம்பாற்றின் குறுக்கே பட்டிச்சேரி என்ற இடத்தில் அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு மாநிலத்தின் பாசன உரிமை கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன் காவிரி நதிநீர் மற்றும் அதன் கிளை நதிகளான பவானி, அமராவதி ஆற்று நீரை நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
அணைக்கான அடித்தளம் அமைக்க கான்கிரீட் போடுவதற் கான கட்டுமான பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இப்பணி தொடங்கி முழுவீச்சில் நடந்து, அங்கே நிரந்த கட்டுமானம் கட்டப் பட்டால் தமிழகத்தின் பாசன உரிமை வெகுவாகப் பாதிக்கப்படும்.
பட்டிச்சேரியில் அணை கட்டும் பணிகளை நிறுத்தி வைக்குமாறும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் வெளியிட்டபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையிலும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள் முடியும் வரையிலும் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும், காவிரி நடுவர் மன்ற ஆணைக்கு முரணாக எந்தவொரு திட்டப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு 2014-ம் ஆண்டு நவம்பர் 28-ம் தேதி இடைக்கால மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
கேரள அரசு தன்னிச்சையாக மேற்கொள்ளும் இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தும்படியும், காவிரி மேலாண்மை வாரியம் செயலாக்கத் துக்கு வரும் வரையிலும், தமிழ் நாடு அனுமதி இல்லாமல் எந்த வொரு திட்டத்தையும் மேற்கொள் ளக்கூடாது என்று கேரள அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழக சட்டப்பேரவையில் 2014-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி அரசின் தனித்தீர் மானம் கொண்டு வந்து நிறைவேற் றப்பட்டது. இந்த தீர்மானத்தை 2014-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி தங்களுக்கு அனுப்பி இதுதொடர் பாக கேரள அரசுக்கு அறிவுறுத் தும்படியும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டேன்.
எனவே, பட்டிச்சேரி என்ற இடத்தில் அணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த மத்திய நீர்வள அமைச்சகத்துக்கு பிரதமர் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியன அமைக்கப்படும் வரை, காவிரி பாசனப் பகுதியில் எந்தவொரு திட்டத்தையும் தொடங்கக்கூடாது என்று கேரள அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் பிரதமரை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டுள்ளார்.