சட்டப்பேரவைத் தேர்தலில் மு.க.ஸ்டாலினிடம் தோல்வி அடைந்த சைதை துரைசாமி, சென்னை மாநகராட்சி மேயரானது போல ஜே.சி.டி.பிரபாகரனுக்கும் வாய்ப்பு இருப்பதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார். அதிமுக சார்பில் அவரை எதிர்த்து போட்டியிட்ட சைதை துரைசாமி நீண்ட இழுப்பறிக்கு பின் 2 ஆயிரத்து 734 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அப்போதே உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக சைதை துரைசாமி நிறுத்தப்படுவார் என்று அதிமுகவினர் தெரிவித்தனர். அதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக சைதை துரைசாமி நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத் தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட ஜே.சி.டி.பிரபாகரன் 37 ஆயிரத்து 730 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் சென்னை மாநகராட்சியின் 80-வது வார்டில் ஜே.சி.டி.பிரபாகரன் போட்டியிடுகிறார். வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளராகவும் உள்ள ஜே.சி.டி.பிரபாகரன் சென்னை மாநகராட்சி மேயராவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் முன்னாள் எம்பி-யும், வடசென்னை தெற்கு மாவட்டச் செயலாளருமான நா.பாலகங்கா 78-வது வார்டிலும், முன்னாள் எம்எல்ஏ-வும் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளருமான கே.பி.கந்தன் 184-வது வார்டிலும் போட்டியிடுகின்றனர். முன்னாள் எம்எல்ஏ-வும், ஆலந்தூர் பகுதிச் செயலாளருமான வி.என்.பி.வெங்கட்ராமன் 166-வது வார்டிலும், முன்னாள் எம்எல்ஏ-வும், கட்சியின் பொதுக்குழு உறுப் பினருமான கே.குப்பன் 7-வது வார்டிலும் போட்டியிடுவது குறிப் பிடத்தக்கது. இவர்களில் யாராவது ஒருவருக்கு சென்னை மாநகராட்சி மேயராக வாய்ப்பு இருப்பதா அதிமுகவினர் கருதுகின்றனர். கடந்த முறை வாக்காளர்கள் வாக்களித்து (நேரடியாக) மேயரை தேர்ந்தெடுத்தனர். இந்த முறை 200 மாமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து (மறைமுகமாக) மேயரை தேர்ந்தெடுக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.