தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக டெங்கு உட்பட காய்ச்சல்கள் பரவி வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் தீவிரமடைந்துள்ள காய்ச்சலால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகள், சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் இல்லை. சாதாரண வைரஸ் காய்ச்சலால் தான் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் நிலவேம்பு குடிநீர் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''கடந்த 8 மாதங்களில் கேரளாவில் 5,192 பேரும், ஒடிசாவில் 5,183 பேரும், மேற்கு வங்கத்தில் 5,129 பேரும், கர்நாடகாவில் 3,788 பேரும் டெங்கு காய்ச்சலால், தமிழகத்தில் 1,163 பேர் என நாடுமுழுவதும் 27,879 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சுமார் 200 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.