தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்துக்கு மத்திய அரசின் தங்க தரச்சான்று அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் (டான்ஸ்டியா) தலைவர் சி.முத்துசாமி நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் கடந்த 60 ஆண்டுகளாக சிறு மற்றும் குறுந்தொழில்களின் வளர்ச்சிக்கு பல்வேறு கண்காட்சிகள், கருத்தரங்குகள், வர்த்தக முன்னேற்ற நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு மாநாடுகளை நடத்தி வருகிறது. அத்துடன் இந்திய, தமிழக அரசுகள், நிதி சார்ந்த நிறுவனங்கள், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், பாரத மிகுமின் நிலையம் போன்ற பெரு நிறுவனங்களுடன் இணைந்து சேவை புரிந்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்துக்கு வணிக உறுப்புரிமை அமைப்பின் தங்கத் தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்திய தர கவுன்சில் அதிகாரிகளால் கடந்த 2 மாதங்களாக தணிக்கை செய்யப்பட்டு ஆய்வு செய்த பிறகு இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் அண்மையில் நடந்த 11-வது தேசிய தர மாநாட்டு விழாவில் வழங்கப்பட்ட இச்சான்றிதழை டான்ஸ்டியா தலைவர் சி.முத்துசாமி, துணைத்தலைவர் சி.கே.மோகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதன் மூலம், தமிழகத்தில் இந்த தங்கத் தரச்சான்றிதழ் அங்கீகாரம் பெற்ற முதல் சங்கம் என்ற பெருமை டான்ஸ்டியாவுக்கு கிடைத்துள்ளது. இந்த அங்கீகாரமானது டான்ஸ்டியா தனது சேவையை மேலும் விரிவுபடுத்தி மத்திய, மாநில அரசின் பல்வேறு தொழில் நலத்திட்டங்களுக்கு அரசுடன் இணைந்து பணி செய்ய பேருதவியாக இருக்கும்.
இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.