கோவை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்கு அடிவாரத்தில் உள்ள நரசீபுரம் பகுதியில் நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் விவசாயப் பரப்பு வழியாக சுமார் 34 வயது மதிக்கத்தக்க பெண் யானை, சுமார் 3 வயது மதிக்கத்தக்க ஆண் குட்டியுடன் கடந்து சென்றது.
காவடியாத்தாள் கோயில் என்ற இடம் அருகே சென்றபோது, அந்த பெண் யானை திடீரென மயங்கி விழுந்தது. தகவல் அறிந்து கால் நடைத் துறையினர் வருவதற்குள் 10.30 மணியளவில் தாய் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
இதை அறியாத குட்டி யானை, தனது தாயை எழுப்புவதற்கு நீண்ட நேரமாக பாசப் போராட்டம் நடத்தியது. மக்கள் கூட்டம் வரு வதைக் கண்டதும் குட்டி யானை பயங்கர பிளிறலுடன் நீண்ட நேரம் குறுக்கும், நெடுக்குமாக ஓடிக் கொண்டே இருந்தது. பின்னர் தாய் யானையை துதிக்கையால் எழுப்ப முயற்சித்துத் தோல்வியடைந்தது. சுற்றிலும் ஆட்கள் நிற்பதை அறிந்ததும், தாய் யானையை சுற்றி வந்து பாதுகாப்பு வளைய மிட்டுக்கொண்டே இருந்தது.
நீண்ட நேரமாக பாசப் போராட் டம் நடத்திய குட்டி யானை, ஒரு கட்டத்தில் சோர்வடைந்து, தாயின் மீது படுத்துக்கொண்டு கண்ணீர் சிந்தியது. இந்தக் காட்சிகள் அங்கு இருந்த அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
குட்டி யானையின் பிடியிலி ருந்து இறந்த யானையை மீட்டு, பிரேதப் பரிசோதனை நடத்த வனத் துறையினர் சுமார் 6 மணி நேரத்துக் கும் மேலாகப் போராடினர். குட்டி யானையை காட்டுப் பகுதிக்குள் விரட்ட எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. குட்டி யானை அங்கேயே சுற்றிச் சுற்றி வந்து தாயின் உடலைப் பாதுகாத்து வந்தது.
மாவட்ட வனஅலுவலர் பெரிய சாமி கூறும்போது, ‘‘உடல்நலன் பாதிக்கப்பட்டு யானை இறந்து விட்டது. அதன் குட்டி ஆரோக் கியத்துடன் இருக்கிறது. அது வேறு இடத்துக்கு நகர்ந்த பின் பிரேதப் பரிசோதனை நடத்தப்படும்’’ என்றார்.
மேற்குத் தொடர்ச்சி மலையடி வார கிராமங்களில் யானையும் மனிதர்களும் எதிர்கொள்வது, யானை ஊருடுவல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகமாகின்றன. கடந்த 16 நாட்களுக்குள் 5 யானை கள் தொடர்ச்சியாக உயிரிழந்தன. இதேபோல கடந்த மே மாதமும் 2 யானைகள் உயிரிழந்துள்ளன.
தாயை எழுப்பும் முயற்சி பலனளிக்காமல் போகவே, தாயின் மீதே படுத்து பாசப் போராட்டம் நடத்துகிறது.
தாய் இறந்தது தெரிந்ததும், முகத்தின் மீது முத்தமிட்டு கண்ணீர் சிந்துகிறது. | படங்கள்: ஜெ.மனோகரன்
சூழலியல் செயல்பாட்டாளர் கொ.மோகன் கூறும்போது, ‘‘2013-ம் ஆண்டு எத்தனை யானைகள் இறந்தன? எப்படி இறந்தன என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டதற்கு இதுவரை பதில் இல்லை. நீர் மாசுபாடு, விவசாய உரப் பயன்பாடு, கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் ஆகியவையே யானைகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட காரணமாக இருக்கும். யானைகளைப் பாதுகாக்க அடுத்தகட்ட நகர்வுக்கு செல்ல வேண்டும்’’ என்றார்.