5 ஏக்கருக்கும் அதிக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் வழங்கிய பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் 5 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. விவசாயிகளின் நலனுக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஏற்க முடியாதது மட்டுமின்றி, கண்டிக்கத்தக்கதும் ஆகும்.
5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருப்பவர்கள் மட்டும் தான் சிறு குறு விவசாயிகள் என்பதால் அவர்களின் கூட்டுறவு சங்கக் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்வதென தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாகவும், அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாத வாதமாகும்.
பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் பல மாதங்களுக்கு முன் விசாரணைக்கு வந்த போதும் தமிழக அரசின் சார்பில் இதே வாதம்தான் முன்வைக்கப்பட்டது. ஆனால், அப்போதே அதை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது, பயிர்க் கடன் தள்ளுபடி செய்வது குறித்த கொள்கை முடிவு மேற்கொள்ளப்பட்ட ஆவணங்களை வரவழைத்து ஆய்வு செய்த நீதிபதிகள், ''தமிழக அரசின் கொள்கை ஆவணத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஒட்டுமொத்த விவசாயிகளைத்தான் குறிக்கும். இந்நிலையில் எப்படி சிறு, குறு, இதர விவசாயிகள் என பிரித்தீர்கள்? சிறு, குறு விவசாயிகள், பெரிய விவசாயிகள் என பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் தான் கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்'' என்று ஆணையிட்டனர்.
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து கடும் வறட்சி வாட்டி வதைத்து வரும் நிலையில் அனைத்து விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இயற்கை அதன் கொடுங்கரங்களால் பேரழிவைக் கட்டவிழ்த்து விடும் போது, அது சிறு, குறு விவசாயிள், பெரிய விவசாயிகள் என வகை பிரித்து பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அனைவருக்கும் ஒரே மாதிரியான பாதிப்பைத்தான் ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் தற்கொலை செய்தும், அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்த 425-க்கும் மேற்பட்ட விவசாயிகளில் கணிசமானவர்கள் பெரிய விவசாயிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுக்கு குறைந்தபட்சம் இரு போகங்கள் என வைத்துக் கொண்டாலும் கடந்த 5 ஆண்டுகளில் தமிழக விவசாயிகள் குறைந்தபட்சம் 10 போகம் சாகுபடி செய்திருக்க வேண்டும். ஆனால், மொத்தமாகவே 3 பருவ சம்பா சாகுபடியை மட்டுமே விவசாயிகளால் வெற்றிகரமாக செய்ய முடிந்திருக்கிறது. குந்தித் தின்றால் குன்றும் மாளும் எனும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக வருமானம் இல்லாத நிலையில், கூடவே பெரிய அளவில் இழப்பும் ஏற்படும்போது அதை எந்த விவசாயியாலும் தாங்க முடியாது என்பது தான் உண்மை. இத்தகைய சூழலில் இழப்பை சமாளிக்க நிவாரணம் வழங்கும் போது, எந்த விதமான பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் அதை வழங்குவது தான் நியாயமான நடவடிக்கையாக இருக்கும்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச அரசும், தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி அரசும் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனை தள்ளுபடி செய்யத் தீர்மானித்த போது, பயனாளிகளை சிறு, குறு, பெரு விவசாயிகள் என வகைப்படுத்தவில்லை. மாறாக தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகைக்கு மட்டுமே உச்சவரம்பு நிர்ணயித்தனர். இதனால் அனைத்து வகையான விவசாயிகளுக்கும் பலன் கிடைத்தது. இதுதான் சரியான அணுகுமுறை.
எனவே, கொள்கை முடிவு என்பன போன்ற நிராகரிக்கப்பட்ட வாதங்களை மீண்டும் மீண்டும் முன்வைத்துக் கொண்டிருக்காமல், 5 ஏக்கருக்கும் அதிக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் வழங்கிய பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். முடிந்தால், பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.