தமிழகம்

விரைவில் அமையவுள்ள திமுக ஆட்சியில் மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்ட நினைவுச் சின்னம் அமைக்கப்படும்: மு.க.ஸ்டாலின் தகவல்

செய்திப்பிரிவு

மெரினா கடற்கரையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவு கூரும் வகையில் இந்த ஆட்சியில் நினைவுச் சின்னம் அமைக்காவிட்டால் விரைவில் அமையவுள்ள திமுக ஆட்சியில் அமைக்கப்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொளத்தூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கொளத்தூர் தொகுதியில் மாநக ராட்சி பள்ளிகளில் இன்று ஆய்வு செய்தேன். கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள் கட்ட வேண்டும், காணொலி வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க வேண்டும், குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் வேண்டும், கணினி வசதிகள் வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை என்னிடம் முன் வைத்தனர்.

எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து முடிந்தவரை இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவேன். சில பணிகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த முடியாவிட்டால் எனது சொந்த நிதியில் இருந்து மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து தருவேன் என உறுதி அளித்துள்ளேன்.

1,500 மரக்கன்றுகள்

வார்தா புயலால் சென்னை மாநக ரில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் விழுந்தன. கொளத்தூர் தொகுதியில் 1,500 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க முடிவு செய்துள்ளோம். அதன் தொடக்கமாக இன்று 10 மரக்கன்று களை நட்டுள்ளோம். மரக்கன்றுகளை நடுவதோடு அதனை பராமரிக்கும் பணியில் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் ஈடுபடுவார்கள்.

இரு கப்பல்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தால் கச்சா எண்ணெய் கசிந்து சென்னை கடற்கரை முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 7 நாள்களாக எண்ணெய் அகற்றப்படாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இந்தப் பிரச்சி னையை திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி எழுப்பியபோது, அவரை பேசவே விடவில்லை. பிறகு நான் எழுந்து பிரச்சினையின் தீவிரத்தை சுட்டிக் காட்டினேன். அப்போது, எந்தப் பாதிப்பும் ஏற்படாது என மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் உறுதி அளித்தார். கச்சா எண்ணெயை அகற்ற மத்திய, மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி சென்னை மெரினா கடற்கரையில் வரலாறு காணாத போராட்டம் நடைபெற் றது. இதனை நினைவுகூரும் வகையில் அங்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என நான் கோரிக்கை விடுத்துள்ளேன். இந்த ஆட்சியில் வைக்கவில்லை எனில், விரைவில் அமையவுள்ள திமுக ஆட்சியில் நினைவுச் சின்னம் அமைப்போம்.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 66 உயர்த்தப்பட்டுள்ளது. சர்க்கரைக்கான மானியத்தை நிறுத்திவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. மக்களைப் பாதிக்கும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

SCROLL FOR NEXT