பண பேர விவகாரம் குறித்து வெளியான வீடியோ தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க வேண்டும் என்ற திமுக கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துவிட்டார். இதனால் சட்டப்பேரவையில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
அதிமுகவில் சசிகலா அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு எம்எல்ஏக்கள் மாறுவதை தடுக்க, கோடிக் கணக்கில் பேரம் பேசப்பட்டதாக தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் கடந்த திங்கள்கிழமை வீடியோ வெளியானது. அதில், ஓபிஎஸ் அணிக்கு மாறிய மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இது தமிழகம் மட்டுமின்றி தேசிய அரசியலையும் பரபரப்பாக்கியது. அந்த வீடியோ போலியானது என்று சரவணன் உடனடியாக மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்காக தமிழக சட்டப்பேரவை இன்று (புதன்கிழமை) கூடியது. அடுத்த மாதம் 19-ம் தேதிவரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது.
திமுக கோரிக்கையும் சபாநாயகர் மறுப்பும்..
பண பேர விவகாரம் குறித்து வெளியான வீடியோ தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க வேண்டும் என்ற திமுக கோரிக்கை விடுத்தது. ஆனால், திமுக கோரிக்கையை ஏற்க சபாநாயகர் ப.தனபால் மறுப்பு தெரிவித்துவிட்டார். "வீடியோ விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அது குறித்து அவையில் விவாதிக்க முடியாது. மேலும், சம்பந்தப்பட்ட உறுப்பினர் சரவணனே குற்றச்சாட்டை மறுத்து விளக்கமளித்துள்ளார். பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளை எல்லாம் விவாதிக்க முடியாது. கூவத்தூர் பேரம் தொடர்பாக ஆதாரம் கொடுத்தால் விவாதிக்க அனுமதியளிக்கிறேன்" என சபாநாயகர் தெரிவித்தார்.
ஆனால், இதை திமுகவினர் ஏற்றுக்கொள்ளவில்லை. காவிரி பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அவையில் விவாதிக்கப்பட்டிருக்கிறது என்றனர். சபாநாயகர் குறுக்கிட்டு அமைதி காக்குமாறு கோரியும் திமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
பதாகைகளுடன் கோஷம்:
அமளியில் ஈடுபட்டுவந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் திடீரென'எம்.எல்.ஏ.க்கள் விற்பனைக்கு' என்ற பதாகைகளுடன் கோஷமிட்டனர். இதனால் அவையில் கடும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தனபால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.