முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீரங்கம் தொகுதியின் மக்கள் பிரதிநிதிகள் அரசியல் அரங்கில் பெரும் பின்னடைவை சந்தித்து வந்துள்ளதாக பல்வேறு உதாரணங்களுடன் கூறுகின்றனர் அந்த தொகுதி மக்கள்.
அதிமுக-வை எம்.ஜி.ஆர். தொடங்கிய பிறகு 1977-ம் ஆண்டு முதல், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற 10 சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக போட்டியிட்டு 8 முறை வெற்றிவாகை சூடியுள்ளது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு கட்சி பிளவுபட்டபோது 1989-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் ஜனதா கட்சியைச் சேர்ந்த வெங்கடேஸ்வர தீட்சிதர் வெற்றிபெற்றார். 1996-ம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் அதிமுக பெரும் பின்னடைவைச் சந்தித்தபோது திமுக-வைச் சேர்ந்த மாயவன் வெற்றி பெற்றார். அதற்குப் பிறகு ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக-வின் ராஜ்ஜியம்தான்.
ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக-வின் கோட்டையாகத் திகழ்ந்ததால் அக்கட்சியின் பொதுச் செயலாளரான ஜெயலலிதா, 2011-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட இந்தத் தொகுதியைத் தேர்வு செய்தார். அவர் எண்ணம் வீண்போகவில்லை. எதிர்பார்த்தபடியே அபார வெற்றிபெற்றார்.
கு.ப. கிருஷ்ணன்
சங்கடங்களை அனுபவித்தவர்கள்
ஸ்ரீரங்கம் தொகுதியின் 35 ஆண்டுகால வரலாற்றில் அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்கள் பல்வேறு சங்கடங்களை அனுபவிக்கவும், சந்திக்கவும் நேர்ந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
1977, 1980 மற்றும் 1984 ஆகிய 3 முறை ஸ்ரீரங்கம் தொகுதி உறுப்பினராக இருந்தவர் திருச்சி சவுந்தரராஜன். இவர் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். அரசியல் அரங்கில் மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தவர். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு கவனிப்பாரின்றி வறுமையில் வாடி பல்வேறு சங்கடங்களை அனுபவித்து வாழ்க்கையை நிறைவு செய்தார்.
1996-ம் ஆண்டு திமுக எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்ட மாயவன் அதற்குப் பிறகு திமுகவி-லேயே முக்கியத்துவம் இழந்த நிலைக்கு ஆளானார். 1991-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட கு.ப.கிருஷ்ணன் பதவியிழந்த பிறகு சிறை செல்ல நேர்ந்தது.
பிறகு போட்டி அதிமுக-வுக்குச் சென்று, அடுத்து தமிழர் பூமி என தனிக்கட்சி ஆரம்பித்து, அப்புறம் தேமுதிக-வில் ஐக்கியமாகி, கடைசியில் சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக-வில் அடைக்கலமானார். தற்போது ஆலங்குடி தொகுதி எம்எல்ஏ என்றாலும் கட்சியில் முக்கியத்துவம் இழந்து நிற்கிறார்.
2001-ம் ஆண்டு எம்எல்ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கே.கே.பாலசுப்பிரமணியன் அமைச்சராகி சில மாதங்களிலேயே பதவியை பறிகொடுத்தார். அதன்பிறகு அவர் ஏறுமுகம் காணவேயில்லை. இப்போது கட்சியில் எந்த பதவியும் இல்லாமல் தனி மரமாக நிற்கிறார். 2006-ம் ஆண்டு பரஞ்சோதி எம்எல்ஏ-வானார். 2011-ம் ஆண்டு மேற்கு தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று அமைச்சர் பதவியையும் பெற்ற இவர், சில வாரங்களில் பாலியல் மற்றும் பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக அந்த பதவியை இழக்க நேர்ந்தது.
2011-ம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகி தமிழக முதல்வராகவும் உயர்ந்த ஜெயலலிதா சில தினங்களுக்கு முன்பு சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு காரணமாக பதவியை இழந்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மேல்முறையீடு செய்து வழக்கில் இருந்து விரைவில் விடுதலையாகி ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் பிரதிநிதிகள், சங்கடத்தை சந்திக்கும் வரலாற்றை மாற்றி எழுதுவார் என்கிறார்கள் அதிமுக-வினர் நம்பிக்கையுடன்.
கே.கே. பாலசுப்பிரமணியன்