பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுவதையொட்டி வார்டுகளை ஒதுக்கீடு செய்வது குறித்த பணி அனைத்து நகராட்சிகளிலும் தீவிரமாக நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சிப் பணியிடங்களில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது. நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி, நகராட்சிகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒவ்வொரு வார்டிலும் ஆண்கள், பெண்கள் எண்ணிக்கை சேகரிக்கப்பட்டு, அதிகப்படியான பெண்கள் உள்ள வார்டுகள் பெண்களுக்கான வார்டுகளாக ஒதுக்கப்பட உள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 நகராட்சிகளிலும் இதற்கான ஆய்வுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. அதன்படி, விருதுநகர் நகராட்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளில் 19,855 குடியிருப்புகள் உள்ளன. இதில் ஆண்கள் 35,773 பேரும், பெண்கள் 36,338 பேரும் வசிக்கின்றனர். விருதுநகரில் 2,4,8,12,13,15,18,19,20,29,30,36 ஆகிய 12 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தற்போது 50 சதவீத ஒதுக்கீட்டின்படி கூடுதலாக 6 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன.
இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் நகராட்சியில் மொத்தம் உள்ள 42 வார்டுகளில் பெண்களுக்கான 14 வார்டுகள் தவிர கூடுதலாக 7 வார்டுகளும், திருவில்லிபுத்தூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் பெண்களுக்கான 13 வார்டுகள் தவிர கூடுதலாக 3 வார்டுகளும், சிவகாசி நகராட்சியில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் பெண்களுக்கான 11 வார்டுகள் தவிர கூடுதலாக 5 வார்டுகளும் பெண்களுக்காக ஒதுக்கப்பட உள்ளன.
திருத்தங்கல் நகராட்சியில் மொத்தம் உள்ள 21 வார்டுகளில் பெண்களுக்கான 8 வார்டுகள் தவிர கூடுதலாக 2 வார்டுகளும், சாத்தூர் நகராட்சியில் மொத்தம் உள்ள 24 வார்டுகளில் பெண்களுக்கான 8 வார்டுகள் தவிர கூடுதலாக 4 வார்டுகளும், அருப்புக்கோட்டை நகராட்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளில் பெண்களுக்கான 12 வார்டுகள் தவிர கூடுதலாக 6 வார்டுகளும் பெண்களுக்காக ஒதுக்கப்பட உள்ளன.
அதையொட்டி, நகராட்சிப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் கடந்த 2011-ம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கீட்டின்படி பெண்கள் அதிகமாக வசிக்கும் வார்டுகள் குறித்த விவரங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த நகராட்சிகளில் எந்தெந்த வார்டுகள் கூடுதலாகப் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்ற விவரம் அடுத்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும் நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.