தமிழகம்

இந்தியாவில் முதல்முறையாக கோவை தனியார் மருத்துவமனையில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை: விமானப்படை தளபதி நாளை தொடங்கி வைக்கிறார்

செய்திப்பிரிவு

இந்தியாவில் முதல்முறையாக மருத்துவமனைச் சார்ந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவை, கோவை யில் உள்ள தனியார் மருத்துவ மனையில் நாளை (ஜூன் 25) தொடங்கப்படுகிறது.

இதுகுறித்து கோவை கங்கா மருத்துவமனை இயக்குநர்கள் எஸ்.ராஜசபாபதி, எஸ்.ராஜசேக ரன் ஆகியோர் கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறிய தாவது: ‘கங்கா ஏர் ஆம்புலன்ஸ்’ சேவைக்குப் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் இத்தாலி நாட்டில் உருவாக்கப்பட்ட, 2 இன்ஜின் களைக் கொண்டது. இது நோயாளி களுக்காக பிரத்யேகமாக வடி வமைக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டரில் நோயாளிக் குத் தேவையான படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, பல்ஸ், ரத்தம் மற்றும் ரத்த அழுத்த அளவு களைக் கண்டறியும் இயந்திரங் கள், வெண்டிலேட்டர் மற்றும் இதயத் துடிப்பைச் சீரமைக்கும் கருவிகளும் உள்ளன.

மருத்துவத் துறையில் பயிற்சி பெற்ற ஒருவர் அல்லது மருத்துவர், நோயாளியுடன் எப்போதும் பயணிப்பார். ஹெலிகாப்டரை ஓட்டுவதற்கு 2 பைலட்டுகள் தயாராக இருப்பதுடன், மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களும் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பிற மருத்துவமனைக்கும் தரப்படும்

கோவை வட்டமலைப் பாளையத்தில் உள்ள கங்கா நர்சிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இந்த ஹெலிகாப்டர் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். இரு விமானநிலையங்களுக்கு இடையில் இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸை இரவில் ஓட்டுவ தற்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது.

கோவையில் உள்ள பிற மருத்துவமனையின் தேவைக்கும் இது பயன்படுத்தப்படும். மேலும், அவசர மருத்துவ தேவை மற்றும் தானம் வழங்கப்பட்ட உடல் உறுப்புகளை கொண்டுசெல்லவும் இது உதவியாக இருக்கும். ஏர் ஆம்புலன்ஸ் சேவையை நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவில், இந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா தொடங்கிவைக்கிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT