சென்னை மயிலாப்பூர் கபாலீஸ் வரர் கோயில் பங்குனிப் பெருவிழா கடந்த 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 3-ம் தேதி சூரிய வட்டம், சந்திர வட்டம் நிகழ்ச்சிகள் நடந்தன. அதிகார நந்தி, வெள்ளி புருஷாமிருகம், சிங்கம், புலி, சவுடல் விமானம் ஆகிய வாகனங்களில் சுவாமிகள் வீதி உலா சிறப்பாக நடைபெற்றன. நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.
பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் விழா நேற்று நடந்தது. 63 நாயன்மார்கள் பல்லக்குகளில் எழுந்தருளினர். விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் ஆகியோரும் அருள்பாலித்தனர். சுவாமி பல்லக்குகள் வரிசையாக புறப்பட்டு பக்தர்கள் வெள்ளத்தில் நீந்தியபடி மாடவீதிகளில் உலா வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
இதைக் காண சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் பல பகுதிகளில் இருந்தும் வந் திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய’ என பக்திப் பெருக்கில் முழக்கமிட்டனர்.
இரவில் பார்வேட்டை விழா மற்றும் ஐந்திருமேனிகள் விழா நடைபெற்றன. 9-வது நாள் விழாவான இன்று காலையில் தொட்டி உற்சவம் மற்றும் மாலையில் மோகினி திருக்கோலம், கமல விமானம், இரவலர் கோலம் நடைபெறுகிறது.
அறுபத்து மூவர் விழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் போக்கு வரத்து மாற்றம் செய்யப்பட் டிருந்தது. மயிலாப்பூர் காவல் இணை ஆணையர் மனோகரன் தலைமையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.