அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா சிறையில் இருப்பதால், போக்குவரத்து பணிமனைகளில் ஆயுதபூஜை கொண்டாடக் கூடாது என வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் தொழிலாளர் தினம் போல, ஆயுத பூஜையும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 300-க்கும் மேற்பட்ட பணிமனைகளில் ஆயுதபூஜை அன்று பஸ்களை கழுவி சுத்தப்படுத்தி, மாலை அணிவித்து, வாழை மரம் கட்டி, வண்ணக் கொடிகளால் அலங்கரித்து பூஜைகள் செய்யப்படும்.
இந்த ஆண்டு ஆயுதபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. ஆனால், அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா சிறையில் இருப்பதால், போக்குவரத்து பணிமனைகளில் ஆயுதபூஜை கொண்டாடக் கூடாது என அதிமுக தொழிற்சங்கத்தினர் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். இதனால், பெரும்பாலான பணிமனைகளில் பஸ்களுக்கு எந்தவித பூஜையும் செய்யப்படவில்லை.
இதுதொடர்பாக தொமுச பொருளாளர் கி.நடராஜனிடம் கேட்டபோது, ‘‘ஆயுதபூஜை கொண்டாடுவது இந்து மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. தொழிலாளர்கள் பயன்படுத்தும் கருவிகள், இயந்திரங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் இந்த பூஜையை செய்துவருகின்றனர். ஜெயலலிதா சிறையில் இருக்கிறார் என்பதற்காக ஆயுதபூஜை நடத்தக்கூடாது என்று போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. இது எந்தவிதத்தில் நியாயம்?’’ என்றார்.
சிஐடியு துணைத் தலைவர் சந்திரன் கூறும்போது, ‘‘ஆயுத பூஜை கொண்டாடுவது என்பது தொழிலாளர்களின் தனிப்பட்ட விருப்பம். போக்குவரத்து தொழிலாளர்கள் ஆண்டுதோறும் அவர்கள் ஓட்டும் பஸ்களை அலங்காரப்படுத்தி, பூஜை செய்து வழிப்படுகின்றனர். இப்போது, எந்தக் காரணத்தையும் சொல்லாமல் திடீரென ஆயுதபூஜை கொண்டாடக்கூடாது என்று சொல்வது சரியல்ல’’ என்றார்.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் சொந்த செலவில்தான், அவர்கள் பணி செய்யும் பஸ்களுக்கு பூஜை செய்கின்றனர். நிர்வாகம் எந்த செலவும் செய்வதில்லை. எனவே, ஆயுத பூஜை கொண்டாடக் கூடாது என நிர்வாகம் தரப்பில் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை’’ என்றனர்.