இலங்கை காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணித் தால், இலங்கைத் தமிழர்கள் மற்றும் மீனவர்கள் பிரச்சினை குறித்து யாரிடம் பேசுவது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கேள்வி எழுப்பி யுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் வியாழக்கிழமை நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் பங்கேற்கக்கூடாது என பல்வேறு கட்சிகளும் தமிழக அமைப்புகளும் போராடி வருகின்றன. இந்த விஷயத்தில் மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. உயர்மட்டக் குழுவைக் கூட்டி, விவாதித்து மத்திய அரசு முடிவெடிக்கும். தமிழக மக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழக மீனவர்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு முடிவெடுக்கும்.
காமன்வெல்த் மாநாடு போன்ற எந்த பிரச்சினைகளை முன்னிறுத்தினாலும், காங்கிரஸ் கட்சியை வீழ்த்த முடியாது. இலங்கை பிரச்சினைகளுக்கும், தமிழகத்திலுள்ள கட்சி அரசியலுக்கும், பொதுத் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இசைப்பிரியா கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கையைச் சேர்ந்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.
ஏற்காடு தேர்தலில் ஆதரவு கேட்டு, தமிழக காங்கிரஸ் தலைமைக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை கட்சி மேலிடத்துக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் மேலிடம் முடிவை அறிவிக்கும் என்று திமுக தலைவருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன்.
காமன்வெல்த் மாநாடு குறித்து பாஜகவின் பல்வேறு மட்டத்தி லுள்ள தலைவர்கள் வெங்கையா நாயுடு, முரளிதர் ராவ் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முரண்பட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றனர். பாஜகவை பொறுத்தவரை, இதில் முடிவெடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளது என்று ஞானதேசிகன் தெரிவித்தார்.