மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவிகளில் குளிக்க தடை விதிக்கும் அளவுக்கு தண்ணீர் கொட்டுகிறது.
குற்றாலத்தில் கடந்த 3 நாட்களாக பிரதான அருவியிலும், ஐந்தருவியிலும் காட்டாற்று வெள்ளம் கொட்டியதால் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.நேற்று காலை 9 மணி வரை அனைவரும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பிற்பகலில் அங்கு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. பிரதான அருவியில் திடீரென்று வெள்ளம் பெருக்கெடுத்தது. அங்குள்ள வளைவை தாண்டி தண்ணீர் விழுந்ததால், அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழையால், வள்ளியாறு, பரளியாறு, கோதையாறு, தாமிரபரணி, பழையாறு ஆகியவற்றில் நேற்றும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. திற்பரப்பு அருவியில் 4-வது நாளாக நேற்றும் குளிக்க தடை விதிக்கப்பட்டது. .
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், பழநி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் பரவலாக நேற்று சாரல் மழை பெய்தது. தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் பகுதியில் 10 நிமிடங்கள் சாரல் மழை பெய்தது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை மழை பெய்தது.