வளர்ப்பு நாய்கள் கடித்து அதன் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அரக்கோணத்தை அடுத்த காட்டுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருபாகரன்(56). சென்னையில் உள்ள ரயில்வே கூடுதல் டிஜிபி அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வந்தார். காட்டுப்பாக்கத்தில் இவருக்குச் சொந்தமான 8 ஏக்கர் மாந்தோப்பில் காவல் பணிக்காக ‘ராட்வைலர்’ என்ற வகை பெண் நாயை வளர்த்துள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு இதே வகை ஆண் நாயை இனப் பெருக்கத்துக்காக வாங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு மாந்தோப்பில் 2 நாய்களுக்கும் இரை கொடுக்கச் சென்றார். அப்போது, 2 வளர்ப்பு நாய்களும் கிருபாகரனை கடித்துக் குதறின. அருகில் வசிப்பவர்கள் கிருபாகரனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். தகவல் அறிந்த கிருபாகரனின் உறவினர்கள் விரைந்து வந்தனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கிருபாகரனை அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நாய்கள் கடித்துக் குதறியதில், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் மனோகரன் கூறும்போது, ‘‘ராட்வைலர் வகை நாய்கள் மிகவும் ஆக்ரோஷமானவை. ஜெர்மன் நாட்டு இனத்தைச் சேர்ந்த இந்த நாய்கள் உயரம் சற்று குறைவாக இருந்தாலும் வாய்ப் பகுதி நீளமாக இருக்கும். கடிக்கும்போது மனித எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு பலம் வாய்ந்த தடைகளைக் கொண்டவை. பொதுவாக, இந்த வகை நாய்களை காவல் பணிக்காக வளர்ப்பார்கள். ராட்வைலர் நாய்க்குட்டிகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன. இந்த வகை நாய்கள் மனிதர்களுடன் எளிதில் பழகாது. முறையான பயிற்சி அளித்தாலும் இவை கட்டளைக்கு அடங்கி நடக்கும் என்று கூற முடியாது. சரியான நேரத்துக்கு இரை கொடுக்கவில்லை என்றாலோ அல்லது அதற்கு எரிச்சலூட்டும் வகையில் நடந்துகொண்டாலோ கடித்துவிடும். அதன் குணங்களை அறிந்து அருகில் செல்வது நல்லது’’ என்றார்.