தூத்துக்குடியில் இருந்து சென்னை வழியாக கோவைக்கு புதிய விமான சேவையை தனியார் விமான நிறுவனம் அடுத்த மாதம் தொடங்குகிறது.
தூத்துக்குடி விமான நிலையம் கடந்த 1992-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. சுமார் 14 ஆண்டுகளாக இந்த விமான நிலையம் பெரிய அளவில் பயன்படாமலேயே இருந்து வந்தது. இடையில் இரண்டு தனியார் நிறுவனங்கள் சென்னைக்கு விமான சேவையை தொடங்கி வெற்றி பெறாததால் சில மாதங்களிலேயே நிறுத்திக்கொண்டன.
ஏர் டெக்கான்
இந்நிலையில் கடந்த 2006 ஏப்ரல் 1-ம் தேதி ஏர் டெக்கான் நிறுவனம் தூத்துக்குடி- சென்னை இடையே விமான சேவையைத் தொடங்கியது. இடையில், ஏர் டெக்கான் நிறுவனத்தை கிங்பிஷர் நிறுவனம் வாங்கியதால் சில ஆண்டுகள் தூத்துக்குடி- சென்னை இடையே கிங்பிஷர் விமான சேவை நடந்து வந்தது. பின்னர் கிங்பிஷர் நிறுவனம் நஷ்டமடைந்ததால் அந்த நிறுவனம் தனது சேவையை நிறுத்திக் கொண்டது.
இதையடுத்து தூத்துக்குடி- சென்னை விமான சேவையை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தொடங்கியது. தற்போது இந்நிறுவனம் தினமும் காலை, மாலை என, இரு நேரங்களில் தூத்துக்குடி- சென்னை இடையே விமான சேவையை நடத்தி வருகிறது.
இதையடுத்து ஏர் பிகாசஸ் என்ற நிறுவனம் தூத்துக்குடி- சென்னை இடையே விமான சேவையைத் தொடங்க முடிவு செய்தது. ஆனால், அந்த நிறுவனத்திடம் போதுமான விமானங்கள் இல்லாததால், புதிய விமானம் வாங்கியதும் சேவை தொடங்கப்படும் என, தெரிவித்துள்ளது.
ஏர் கார்னிவல்
இந்நிலையில் கோவையை சேர்ந்த ஏர் கார்னிவல் என்ற புதிய விமான நிறுவனம் தற்போது தூத்துக்குடிக்கு விமான சேவையை தொடங்க முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் முதல் தூத்துக்குடி- சென்னை- கோவை மார்க்கத்தில் விமானத்தை இயக்க அந்நிறுவனம் முன்வந்துள்ளது. இதையடுத்து ஏர் கார்னிவல் நிறுவனத்துக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் அலுவலகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்நிறுவனத்தின் அதிகாரிகள் வரும் 20-ம் தேதி தூத்துக்குடி வந்து, விமான நிலையத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகத்தை பார்வையிடுகின்றனர். அப்போது வாடகை, விமான நிலைய வசதிகள் மற்றும் இதர விதிமுறைகள் தொடர்பாக இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் ஒப்பந்தத்தில் அவர்கள் கையெழுத்திடவுள்ளனர்.
தேதி முடிவாகவில்லை
இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, “ஏர் கார்னிவல் நிறுவனத்தினர் செப்டம்பர் மாதம் முதல் விமான சேவையை தொடங்குவதாக தெரிவித்துள்ளனர். அதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. விமானம் இயக்கப்படும் நேரம் குறித்தும் இன்னும் முடிவு செய்யவில்லை” என்றனர்.
ஏர் கார்னிவல் நிறுவனம் தற்போது கோவை- சென்னை- மதுரை இடையே விமான சேவையை நடத்தி வருகிறது.
வர்த்தகர்கள் மகிழ்ச்சி!
அகில இந்திய தொழில் வர்த்தக சங்கத் தலைவர் பி.எஸ்.எஸ்.கே. ராஜாசங்கரலிங்கம் கூறும்போது, “தூத்துக்குடிக்கு மேலும் ஒரு விமான சேவை வருவது வரவேற்கத்தக்கது. தற்போது தூத்துக்குடி- சென்னை இடையே அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. போட்டியாளர் வரும்போது கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. சேவையின் தரமும் உயரும்” என்றார்.
இந்திய தொழில் வர்த்தக சங்க துணைத் தலைவர் ஆர்.எட்வின் சாமுவேல் கூறும்போது,
“தற்போது வர்த்தகர்கள், வணிகர்கள், ஏற்றுமதி, இறக்குமதியாளர்கள் கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு காரில் தான் சென்று வருகிறோம். விமான சேவை வருவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார் அவர்.