தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணை (கே.ஆர்.பி அணை) தண்ணீரின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நிகழாண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியிலும் கிருஷ்ணகிரி அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் 37 அடிக்கு கீழ் குறையாமல் தண்ணீர் இருந்தது. அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. கோடை மழையால் அணைக்கு விநாடிக்கு 100 கனஅடி என வரத் தொடங்கிய தண்ணீரின் அளவு நேற்று விநாடிக்கு 606 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 39.50 அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாசனக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.