பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிடி ஸ்கேன் மருத்துவப் பிரிவில் ரேடியாலஜிஸ்ட் நியமிக்கப்படாததால் ஸ்கேன் முடிவுகளைப் பெற தனியார் மையத்தை நாட வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது. அரசு மருத்துவமனையே தனியாரை நாடிச் செல்லும்போது, செலவைப் பார்க்காமல் மொத்த சிகிச்சைக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கே சென்று விடலாம் என ஏழை நோயாளிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, கோவை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனையாக இருந்தாலும் நீண்ட காலமாகவே அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது. தலைமை மருத்துவமனையின் தரத்தைக் காப்பாற்ற சிடி ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, டயாலிசிஸ் சிகிச்சை கருவிகள் எனப் பல்வேறு மருத்துவ வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கிராமப்புற மற்றும் மலைப் பகுதி மக்களின் முழு நம்பிக்கையாக இருந்த இந்த மருத்துவமனை, ஊழியர்கள் பற்றாக்குறையால் அந்த நம்பிக்கையை சிறிது சிறிதாக இழந்து வருகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொள்ளாச்சி மருத்துவமனைக்கு கோவை சி.எம்.சி.எச்.ல் இருந்து கொண்டு வரப்பட்ட சி.டி. ஸ்கேன் கருவி கடந்த பிப்ரவரி மாதம் முதல் செயல்படத் தொடங்கியது. வால்பாறை, பொள்ளாச்சி, கோட்டூர், வேட்டைக்காரன்புதூர், உடுமலை ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் குறைந்தபட்சம் 10 பேர் சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு வருகின்றனர். ஆனால் ஸ்கேன் எடுத்து அதன் முடிவுகளைக் கூறி, தேவையான சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் ரேடியாலஜிஸ்ட் இன்று வரை நியமிக்கப்படவில்லை.
ஆரம்பம் முதலே இக்குறை இருந்ததால், அருகே உள்ள தனியார் ஸ்கேனிங் மையம், அரசு மருத்துவமனைக்கு உதவி வருகிறது. அதாவது நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுத்து, அவற்றை தனியார் மையத்தில் கொடுக்கிறது அரசு மருத்துவமனை. அந்த மையம் ஸ்கேனிங் முடிவுகளை மருத்துவமனைக்கு அளிக்கிறது. தனியார் ஸ்கேனிங் மையத்தின் உதவி பாராட்டத்தக்கதாக இருந்தாலும், தனியார் உதவியைத் தேடும் அரசு மருத்துவமனையின் நிலை பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் உள்ள சி.டி. ஸ்கேன் பிரிவில் தற்போது ஒரே ஒரு தொழில்நுட்ப வல்லுநர் மட்டுமே பணியில் உள்ளார். 24 மணி நேரமும் இயங்கக்கூடிய, மாவட்டத் தலைமை மருத்துவமனையில் குறைந்தபட்சம் ஒரு ரேடியாலஜிஸ்ட், 3 தொழில்நுட்ப வல்லுநர்கள் இருக்க வேண்டியது அவசியம். ஆனால், தனியார் உதவியை மட்டுமே நம்பி, ஊழியர்கள் பற்றாக்குறையை சரி செய்யாமல் இயங்கி வருகிறது இந்த அரசு மருத்துவமனை.
கட்டணம் அதிகமாக இருந்தாலும் சரி தனியாரிடமே பரிசோதித்து அங்கேயே முடிவுகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்ற மனநிலை பலருக்கும் ஏற்பட்டு வருகிறது. எனவே போதிய ஊழியர்களை நியமித்து முறையான சிகிச்சை வழங்க வேண்டியது மருத்துவமனை நிர்வாகத்தின் பொறுப்பு என்கின்றனர் பொதுமக்கள்.
இது குறித்து நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் ஆர்.வெள்ளை நடராஜ் கூறுகையில், தனியார் ஸ்கேனிங் மையம் இதை சேவையாக செய்து வருகிறது. ஒருவேளை அந்த மையத்தினருக்கு முக்கிய பணி இருக்குமானால், அரசு மருத்துவமனையை நம்பி வரும் நோயாளிகள் எவ்வளவு நேரமானாலும் காத்திருக்க வேண்டி வரும்.
பொள்ளாச்சி பகுதியில் விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன. மலைப்பகுதியான வால்பாறையில் இருந்து ஒரே நம்பிக்கையாகப் பலரும் பொள்ளாச்சி மருத்துவமனைக்கு வருகின்றனர். ஸ்கேனிங் மூலம் மட்டுமே இக்கட்டான சமயங்களில் தேவையான சிகிச்சை பற்றி கூற முடியும். அப்படிப்பட்ட சமயத்தில் தங்களுக்கென தனியாக ஸ்கேன் எடுக்கவும், அதன் முடிவுகளைக் கூறி, சிகிச்சையை பரிந்துரைக்கவும் ஊழியர்கள் தேவை என்பதை மருத்துவமனை நிர்வாகம் உணர வேண்டும் என்றார்.