தமிழகம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தை மதிக்கிறோம்: தமிழகத்தில் அசாதாரணமான சூழலை ஏற்படுத்த சதி - பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அசாதாரணமான சூழலை ஏற்படுத்த சில அமைப்புகள் சதி செய்வதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற வேண்டும் என்பதே பாஜக-வின் நிலைப்பாடு. மத்திய அரசின் நிலையும் இதுதான். கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டது. இதனால்தான் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்க கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்காத நிலையில் அவசர சட்டம் கொண்டு வந்தால் அதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கும் சூழ்நிலை வரலாம். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் வகையில் மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தை மதிக்கிறேன். மாணவர்களின் இந்தப் போராட்டத்தை காவல் துறையினர் கனிவாக அணுக வேண்டும். மாணவர் களின் போராட்டத்தைப் பயன்படுத்தி தமிழகத்தில் அசாதாரணமான சூழலை ஏற்படுத்த சில அமைப்புகள் சதி செய்து வருகின்றன. இதனை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டதற்கு காங்கிரஸும், திமுகவுமே காரணம். ஜல்லிக்கட்டுக்கு எதிராகவும் பீட்டாவுக்கும் முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் கடிதம் எழுதினார். முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டித்தனமான விளையாட்டு என்றார். இவர்களுக்கு திமுக துணை நின்றது.

இதனை மறைத்துவிட்டு அவர்களும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட் டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை அநாகரி கமாக விமர்சித்துள்ளார். பொறுப்பான பதவியில் உள்ள அவர் நாட்டின் பிரதமரை அவமானப்படுத்தும் வகையில் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.

SCROLL FOR NEXT