சென்னையில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால், தி.நகரில் நேற்று விற்பனை மந்தமாகவே இருந்தது. மழை ஓய்ந்து வெயில் அடித்தபோதிலும் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே விற்பனை மும்முரமாக இருந்தது. குறிப்பாக ஜவுளிக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. நகரின் முக்கிய வர்த்தகப் பகுதியான தி.நகரில் கூட்டம் அலைமோதியது. சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் தி.நகருக்கு வந்து சென்றனர்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் 4 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால், தீபாவளி விற்பனை மந்தமானது. இருந்தபோதிலும் ஓரளவு மக்கள் நனைந்து கொண்டும் குடை பிடித்தபடியும் கடைகளுக்கு வந்து சென்றனர்.
தொடர் மழையால் தி.நகருக்கு செல்ல தயங்கிய பலர், தங்கள் பகுதியில் உள்ள கடைகளிலேயே புதிய ஆடைகள் மற்றும் பொருட்களை வாங்கிச் சென்றனர். மேலும், மழையால் பட்டாசு விற்பனையும் ‘டல்’ அடித்தது. இந்நிலையில், மழை ஓய்ந்து நேற்று காலையில் இருந்து வெயில் அடித்தது. இதனால், பட்டாசு விற்பனை சூடுபிடித்தது. பெரியவர்களும் சிறியவர்களும் ஆர்வத்துடன் பட்டாசுகளை வாங்கிச் சென்றனர்.
ஆனாலும், பெரும்பாலான மக்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால், தி.நகரில் நேற்று கூட்டம் குறைவாகவே இருந்தது. ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை அதிக நெரிசல் இன்றி காணப்பட்டது. இதுதொடர்பாக தி.நகர் வியாபாரிகள் கூறும்போது, ‘‘தி.நகரில் எப்போதுமே தீபாவளி விற்பனை நன்றாக இருக்கும். அதுவும் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பு மக்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், இந்த ஆண்டு தொடர் மழையால் பெரிய கடைகள் முதல் பிளாட்பார கடைகள் வரை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலம் என்பதால் கடன் வாங்கி பொருட்களை வாங்கிக் குவித்தோம். ஆனால், மழையால் வியாபாரம் நடக்கவில்லை’’ என்றனர்.