டெல்லியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் கூட்டத்தில் தமிழக்ததின் சார்பில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் 11-வது கூட்டம் நடைபெற உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தமிழகத்தின் சார்பில் முதல்வர் ஜெயலலிதாவே பங்கேற்க வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் பிரச்சினைகளை எடுத்துரைத்து கிடைக்க வேண்டிய சலுகைகளை, திட்டங்களைப் பெற முடியும்.
எப்போதும் போல் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அல்லது வேறொரு அமைச்சரை அனுப்பாமல் முதல்வரே நேரடியாக கலந்து கொள்ள வேண்டும். மாநிலங்களுக்கு இடையேயான உறவு, பொருளாதார திட்டங்கள், பள்ளி கல்வி விவகாரம், நேரடி மானிய திட்டம், தமிழகத்தின் பாதுகாப்பு, தமிழ் மொழிக்கு முக்கிய அங்கீகாரம், கச்சத்தீவு மீட்பு, மீனவர்கள் பிரச்சனை, நதிநீர் பிரச்சனை போன்ற பல முக்கிய அம்சங்களை எடுத்துரைத்து தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல, இந்தக் கூட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
பிரதமர் மோடியை டெல்லியில் கடந்த வாரம் முதல்வர் ஜெயலலிதா சந்தித்தார். தமிழகத்தின் நலனுக்காக இந்தச் சந்திப்பு நடந்தது என அரசு கூறினாலும், தனது சொந்த நலனுக்காகவே சந்தித்தார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எனவே, இந்த முறை அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டு தமிழகத்தின் நலனுக்காக குரல் எழுப்ப வேண்டும். தமிழகத்துக்கான திட்டங்களைப் பெற வேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.